அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது

5 09 2008

அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

-கார்ல் மார்க்ஸ்

அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.

காரணம், இங்கே அவர் மகர் இல்லை. சாலையில் எதிரே அவரைக் கடந்து செல்பவரிடம் ‘இவன் என்ன சாதியாக இருப்பான்’ என்கிற சந்தேகப் பார்வைகள் இல்லை. முகச் சுளிப்புகள் இல்லை. விலகி நடந்து, சக மனிதனை அற்பப் பிராணி போன்று நடத்தும் அசிங்கங்கள் இல்லை. இதனாலேயே அவரது நெஞ்சு நிமிர்ந்தது. நடையிலும் மனதிலும் உற்சாகம் பிறந்தது. கைகள் சற்று அகலமாகவே நகரத்தின் வீதிகளை வீசி அளந்தன. என்றாலும், தனது தாய்நாடான இந்திய மண்ணில் இந்த அக சுதந்திரத்தைத் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கம் ஒரு புண்ணாக அவரது நினைவில் வலி ஏற்படுத்திக்கொண்டு இருந் தது. இந்தக் குறைகளிலிருந்து தன் தேசத்தையும் தன் மக்களையும் விடுவிப்பதுதான் எதிர்காலத்தில் தான் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர். 22 வயதில் விரும்பி தன் முதுகில் ஏற்றிக்கொண்ட இந்தச் சுமையுடன், அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக்கழகத்தினுள் அடியெடுத்து வைத்தார்.

கல்லூரிப் பருவத்துக்கே உண்டான சக மாணவர்களின் கேளிக்கைகளைக் கண்டும் காணாதவராக விலகி நடந்தார். வராந்தாக்களில் அவர்கள் விடுக்கும் உற்சாகக் கூக்குரல்கள், எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போலத்தான் இவருக்குக் கேட்டது. அந்த அளவுக்கு வேறு எது பற்றிய சிந்தனையுமே இல்லாதவராக, எந்நேரமும் கல்வி ஒரு காந்தம் போல இழுத்துக்கொண்டு இருந்தது. இதனாலேயே அவரது கால்கள் கல்லூரிக்கும் அவர் தங்கியிருந்த காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கும் இடைப்பட்ட தூரத்தை மட்டுமே அளந்துகொண்டு இருந்தன.

அமெரிக்கர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் அம்பேத்கரைக் கவர்ந்தன. குறித்த நேரத்தில் உணவு மேசைக்கு வரும் ஒழுங்கு, சிந்தாமல் சிதறாமல் உணவு அருந்தும் பாங்கு, அணியும் உடைகளின் நேர்த்தி, தன்னையும் இழக்காமல் பிறரையும் மதிக்கும் அவர்களது பண்பு போன்ற குணங்களை மெள்ள மெள்ள அவர் தனதாக மாற்றிக்கொண்டார். இரண்டு ரொட்டித் துண்டு, ஒரு மீன் துண்டு, ஒரு குவளை காபி… இவ்வளவுதான் அங்கு அவர் மேற்கொண்ட உணவு முறை. இதற்கே ஒரு நாளைக்கு ஒரு டாலரும் பத்து சென்ட்டும் அவர் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட உதவித்தொகையில் பாதிப் பணம் இதற்கே செலவழிந்ததால், சில சமயம் உணவு விடுதிக்குள் நுழையாமலே கடந்துசென்றுவிடுவார்.

1915ல், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் வென்ற அம்பேத்கர், அடுத்த ஆண்டிலேயே ‘இந்தியாவில் சாதியம்’ மற்றும் ‘பண்டைய இந்தியாவில் வாணிபம்’ என்னும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, டாக்டர் பட் டங்களைத் தன் பெயரின் அடைமொழியாக இழுத்துக்கொண்டார். அமெரிக்காவில் ஒருவழியாக அவர் வந்த காரியம் பூர்த்தியானது என்றாலும், தான் காண விரும்பும் லட்சிய உலகுக் கான போராட்டத்துக்கு இந்தப் படிப்பெல்லாம் போதாது என உணர்ந்தார். அறிவுத் தேடல் நெருப் பெனக் கொழுந்துவிட்டு எரிய, அடுத்து லண்ட னுக்குப் பயணமானார். லண்டன் நகரத்தின் ‘கிரேஸ் இன்’ சட்டக் கல்லூரி, பொருளாதாரம் படிக்க அவரை அனுமதித்துக்கொண்டது. ‘என்னதான் ஒருவனுக்கு அறிவு நெருப்பு இத்தனை பிரகாசமாக எரிந்தாலும், இப்படியா வெறியுடன் நாடு நாடாக அலைவது’ என, அதுவரை அம்பேத்கரின் கல்விக்கு உதவிய மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டுக்குத் தோன்றியதோ என்னவோ… ‘இனி என்னால் தம்பிடி காசுகூடச் செலவு செய்ய முடியாது’ எனக் கையை விரித்துவிட்டார். அதோடு மட்டுமின்றி, இது வரை படிக்க வைத்த செல வுக்குப் பிரதியாக உடனே அம்பேத்கர் அரண்மனை வந்து சேவகம் செய்ய வேண்டும் எனும் கண்டிப்பான உத்தரவு வேறு!

பட்டம் பாதியில் அறுந்து தொங்கியது. அம்பேத்கரின் மனச் சோர்வைப் புரிந்துகொண்ட ‘கிரேஸ் இன்’ கல்லூரி நிர்வாகம், ‘எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இங்கே வந்து உங்களின் படிப்பைத் தொடரலாம்’ என அனுமதி வழங்கி விடை கொடுக்க, அம்பேத்கர் அரை மனதோடு பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானார். 1917 ஜூலையில், மார்ஷல் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எஸ்.எஸ்.கெய்ஸர் எனும் கப்பல், அம்பேத்கரை சமாதானம் செய்யும் விதமாகக் கூவியபடி, இந்தியா நோக்கிப் புறப்பட்டது.

இந்தியா திரும்பியதும், அம்பேத்கரின் புகழ் பம்பாய் மாகாணத்தில் சரசரவெனப் பற்றிப் பரவத் தொடங்கியது. அமெரிக்கா சென்று படிப்பது என்பது, இந்தியாவில் அன்றைக்குச் சாதாரண காரியமல்ல.வசதிமிக்க உயர் சாதியினருக்கேகூட அன்றைய நிலையில் ஆகாத காரியம் அது. இச்சூழலில், மகர் இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பியது, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. கண்டிப்பாக இதற்கு விழா எடுத்தே தீர வேண்டும் எனஅனைவரும் விரும்பினர். மாகாண முதன்மை நீதிபதி தலைமையில் பாராட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்த பின், பெரும் கூட்டம் வீடு தேடி வந்து முற்றுகையிட்டுப் பாராட்டைக் குவித்தது. ஆனால், அத்தனைப் பாராட்டுக்களும் ஒரே வாரத்தில் அம்பேத்கரின் கண் முன் சரிந்து விழுந்தன.

படிப்பு எப்படியும் தன் கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்த்திவிடும் என நினைத்திருந்த அம்பேத்கரின் எண்ணத்தில் மண் அள்ளிப் போடுவதற்கென்றே பரோடா அரண்மனையில் காத்திருந்தனர் சாதி வெறியர்கள் சிலர். ஆனால், இது தெரியாத பரோடா மன்னரோ, அம்பேத்கரின் உயர்ந்த படிப்பைக் கௌரவப்படுத்தும் வகையில் ராணுவச் செயலாளராக நியமித்துப் பத்தாண்டுகள் பணிபுரியுமாறு கனிவான கட்டளை விடுத்திருந்தார். துவக்கத்தில் அம்பேத்கரும் அந்தப் பதவியை உவப்புடன் ஏற்றுக்கொண்டு, அதற்கான வேலைகளில் மூழ்கினார். ஆனால், அரண்மனையே அவரைக் கண்டதும் ஓடி ஒளிய ஆரம்பித்தது. ஒரு நாள் தனக்குச் சேவகம் செய்ய நியமிக்கப்பட்ட ஒரு கடைநிலை ஊழியனிடம் அம்பேத்கர் தண்ணீர் கொணருமாறு சொன்னார். வெகு நேரம் அந்தப் பணியாளன் சிலை போல நின்றுவிட்டு, பின்பு தயங்கித் தயங்கி அவரையே எடுத்துக் குடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். படிப்பறிவு இல்லாத அந்தப் பாமரனிடம் இருந்த சாதிவெறியை நினைத்து வருந்தியபடியே, அம்பேத்கர் அருகில் இருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுக்கப் போக, சட்டென அங்கு வந்த இன்னொரு பணிப் பெண் பதற்றத்துடன், அம்பேத்கருக்கெனப் பிரத்யேகமாக வேறொரு பானை வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகுமாறும் கூறினாள். சாதி வெறி எந்த அளவுக்கு ஒரு நோயாக அவர்களுள் ஊறிப்போயிருக்கிறது என்பதை அறிந்து அம்பேத்கர் அடைந்த துயரத்துக்கு அளவில்லை. கூடவே, இந்த நோயிலிருந்து இவர்களை மீட்டாக வேண்டுமே என்கிற கவலையும் சேர்ந்து, அம்பேத்கரின் மனதில் தாங்க முடியாத பாரத்தை ஏற்றிவிட்டது. இந்த வேதனையுடன், தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார். அங்கோ இதை எல்லாம்விடப் பெரும் வேதனை காத்திருந்தது.

சற்றுத் தொலைவிலேயே பார்த்துவிட்டார்… விடுதிக்கு வெளியே பத்துப் பதினைந்து பேர் கைகளில் தடியோடு, கண்களில் வெறியோடு காத்திருந்தனர்.

நன்றி : விகடன்(அஜயன் பாலா)

-சரித்திரம் தொடரும்





ஆரம்ப கல்வி-2

5 09 2008

கிளை பிரிந்து செல்லும் ஆறு, வறண்ட நிலங்களைத் தேடி அலைந்து, இறுதியில் வீணே கடலில் கலக்கிறது.

ஆனால், அம்பேத்கர் எனும் மூல ஆறு, தன் பயணத்தின் துவக்கத்திலேயே ஒடுக்கப்பட்டவர்களுக் கான பயணமாகத் தன் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதி வரை பயணித்தது.

அந்த நெடிய பயணத் தின் முதல் புள்ளிதான் அன்று விழாவில் கெலுஸ்கர் அவருக்குப் பரிசாகத் தந்தபுத்தகம்.

அந்தப் புத்தகத்தின் பெயர் ‘கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு’.

அனைத்து உயிர்களுக்கும் அன்பையும் அமைதியையும் இன்பத்தையும் நல்கும் வாழ்க்கைநெறியான புத்தரது போதனைகள் அம்பேத்கரது உள்ளத்தில் புது வெளிச்சம் பாய்ச்சின. தன்னைச் சூழ்ந்து அழுத்தியிருக்கும் சாதியம் எனும் கற்பாறைகளை அடித்து நொறுக்க, அறிவு ஒன்றுதான் தன் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என்பதை அம்பேத்கர் அந்த விழா மேடையில் உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் அந்த மெட் ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றது 750க்கு 282 எனும் மிகக் குறைந்த மதிப்பெண்களில்தான்.ஆனால், அன்று வரை வேறு எவரும் மகர் இனத்தில் இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றி ருக்கவில்லை.

உயிருக்காகப் போராடிக் கொண்டு இருக்கும் பெரும் கூட்டத்தினரின் நெருக்கடிகளில்இருந்து தப்பித்திருப்பது தான் ஒருவர் மட்டுமே என்பதை உணர்ந்தார் அம்பேத்கர். துன்பத்திலும் துயரிலுமாக இந்தியா முழுக்க உழலும் எத்தனையோ கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் ஒரு ஏணியாக மாறி, அவர்களையும் தன்னைப் போல மாற்ற முடியுமா எனக் கனவு கண்டார். அவருக்குள் அந்தக் கனவு ஒரு பொறியாகக் கனன்றது. தான் இன்னும் பல உயர்ந்த படிப்புகளை படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க இயலும் என அவரது உள்ளம் அறிவுறுத் தியது.

பாய்மரக் கப்பல் கிழக்குத்திசை யில் பயணிக்கும்போது கடல் காற்று மேற்கு நோக்கி அடித்து அதனைத் திசைதிருப்புவதுபோல, அவரது எண்ணங்களுக்கு மாறாக ஒரு திடீர்ச் சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அது அவரின் திருமணம். உண்மையில், அம்பேத் கர் தன் தந்தையிடம் இப்போது திருமணம் வேண்டாம் என எவ்வளவோ மன்றாடிப் பார்த் தார். ஆனாலும், ஒரு சம்பந் தத்தை அவரது தந்தையார் பேசி முடித்துவிட, அம்பேத்கர் மறுத்து விட்டார். பஞ்சாயத்து அவருக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்த தோடு, அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் எனத் தீர்ப்புச் சொன்னது. அப்போது அம்பேத் கருக்கு வயது பதினாறுதான். மணப் பெண்ணோ ஒன்பதே வயதான சிறுமி. பெயர் ரமாபாய்.டபோலியில் ஒரு சுமை தூக்கும் கூலியின் இரண்டாவது மகள். பம்பாய் பைகுல்லா மார்க்கெட்டில் ஒரு திறந்தவெளி அங்காடியில், சந்தடிகள் ஓய்ந்த இரவு நேரத்தில் கரிய வானும் நட்சத்திரங்களும் உடன் சில நண்பர்கள், உறவினர் கள் சாட்சியாக எளிமையான அவர்களின் திருமணம் நிகழ்ந்தது.கருக்கலில் மீன் விற்கும் பெண்கள் அங்கு வருவதற்குள் மொத்தக் கூட்டமும் கலைந்து சென்றது.

சாயாஜிராவ் கெய்க்வாட். பரோடாவை ஆண்டுகொண்டுஇருந்த சிற்றரசர். கெலுஸ்கர்தான் அவரைப் பற்றி முதன்முதலாக அம்பேத்கரின் தந்தையிடம் எடுத்துக் கூறி, ”அந்த மன்னர் யாராவது ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்குரிய கல்விக்கான முழுத் தொகையையும் செலவு செய்யச் சித்தமாக இருக்கிறார். நாம் ஏன் அம்பேத்கரின் கல்லூரிப் படிப்புகாக அவரிடம் உதவிகேட்கக் கூடாது?” என்றார். கெலுஸ்கரின் இந்தக் கேள்வி அடுத்த சில நாட்களிலேயே அம்பேத்கரையும் அவரது தந்தை யையும் பரோடா அரண்மனை யில், மன்னர் சாயாஜி முன் கொண்டு நிறுத்தியது. அம்பேத்கரின் புத்திசாலித்தனத்தைச் சில கேள்விகளின் மூலம் அறிந்து கொண்ட மன்னர், மாதா மாதம் 25 ரூபாய் உதவித்தொகை தருவதாக உத்தரவாதம் அளித்தார்.

பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரி, அம்பேத்கரின் வரவால் சற்றுப் பரபரப்படைந்தது. தன்னைக் கண்டதும் விலகிச் செல்லும் சில உயர்சாதி மாணவர்களைக்கண்டு உள்ளூர நகைத்தார் அம்பேத்கர். கண்ணிருந்தும் குருடர்களாகத் தடுமாறும் அவர்களை அவரது அறிவின் வெளிச்சம் அலட்சியப்படுத்தி அப் பால் தள்ளியது. கல்லூ ரியில் முல்லர் போன்ற ஆசிரியர்கள் அவரது அறிவின் ஆழத்தைக் கண்டு, அவருக்கு அவ்வப்போது அத்தியாவசியமான உதவிகளைச் செய்து, தங்களது பெயரை வரலாற்றில் இணைத்துக்கொண் டனர். அம்பேத்கரின் தந்தையான ராம்ஜிசக்பால் தன் மகனுக்காக பம்பாய் பரேலில் இரண்டு அறை களைக்கொண்ட புதிய வீட்டுக்கு குடிபுகுந்தார். அவற்றில் ஒரு அறை படிப்பதற்கென்றே பிரத் யேகமாக ஒதுக்கப்பட்டது. மகன் இரவு வெகு நேரம் கண்விழித்துப் படித்துக்கொண்டு இருப்பதை வெளியில் இருட்டில் அமர்ந்து, ஜன்னலின் வெளிச்சத்தை பார்த் தபடியே ராம்ஜியும் பூரிப்புடன் கண்விழித்திருப்பார். அம்பேத் கரின் உழைப்பின் பலனாக 1912ல் பி.ஏ., பட்டம், அவரது தலையை அலங்கரித்தது.

படிப்பு முடிந்த பின், மன்னருக்குக் கொடுத்த வாக்கின்படி அம்பேத்கர் அரண்மனையில் வேலை செய்தாக வேண்டும்.ஆனால், தந்தையார் ராம்ஜி

சக்பாலுக்கோ தன் மகன் மேலும் உயர் படிப்புகள் படித்து, அனைவரும் வியக்கத்தக்க உன்னத நிலைக்கு வர வேண்டும் என்பது பிடிவாதமான அவா. ஆனால், அம்பேத்கரோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுதான் கற்ற கல்விக்கு அழகு என்பதில் தீவிரமாக இருந் தார். படைப் பிரிவில் லெப்டி னென்ட் பதவி அவருக்காகவே காத்திருந்தது. தன் மகன் இத்த னைப் படித்தும், மீண்டும் தன் னைப் போலவே மன்னனுக்கு சேவகம் செய்யப் போய்விட்டானே எனும் கவலை ராம்ஜிசக்பாலை உருக்குலைக்கத் தொடங்கியது.

வேலைக்குச் சேர்ந்து சரியாகப் பதினைந்தே நாளில், அம்பேத்க ருக்கு ஒரு தந்தி வந்தது. அடுத்த நாள் காலையில், கட்டிலில் படுத் திருந்த அந்த வயதானவரின் மெல்லிய கரங்கள் நடுங்கியபடி அம்பேத்கரின் முதுகை வாஞ்சை யோடு தடவிக்கொடுத்தன. சுற்றி யிருந்த உறவினர்களின் கேவல் களும் அழுகை ஒலிகளும் ஒரு கட்டத்தில் வெடித்துப்பீறிட, நொடியில் சடலமாகிப்போன தன் தந்தையின் உடலைப் பார்த்து அம்பேத்கர் கதறியழுதார். அந்த வெற்றுடம்புக்கு இப்போது மகனை உயர்ந்த படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை ஏதும் இல்லை. அம்பேத்கருக்குள் அது இடம் மாறியிருந்தது.

ஒரு மகனாகத் தந்தைக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடித்ததும்,இனி அரண்மனைக்குத் திரும்புவ தில்லை என அம்பேத்கர் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார். தந்தையின் கனவு என்பது ஒரு காரணம்தான் என்றாலும், அரண்மனையில் இதர சாதியினர் காட்டும் சாதிய வேறுபாடுகளும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந் நிலையில், அடுத்து என்ன செய்வது எனக் குழம்பிய நிலையில் அம்பேத்கர் தன் எதிர் காலத்தின் இருண்ட வாசலில் நின்றுகொண்டு இருந்தபோது, தூரத்து வெளிச்சப் புள்ளியாய் ஒரு தகவல் வந்தது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைத் தன் சொந்த செலவில் படிக்கவைக்கப்போவதாக பரோடா மன்னர் விடுத்திருந்த அழைப்பு அது. எந்த அரண்மனைக்குள் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந் தாரோ, அதே அரண்மனைக்கு தன் கல்வியின் நிமித்தமாகவும் தன் தந்தையின் கனவு நிமித்த மாகவும் மீண்டும் உதவி கேட்டு விண்ணப்பித்தார் அம்பேத்கர். மூன்று முத்துக்களை பரோடா அரண்மனை தேர்வு செய்தது.அவர்களில் ஒருவராக அம்பேத்கர் மீண்டும் அரசரின் முன் நின்றார்.கல்வி முடிந்ததும், பத்தாண்டுக் காலம் அரண்மனைச் சேவகம் எனும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கையெழுத்திட்டார்.

1913 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு காலை நேரம்… நியூயார்க் நகரம் எப்போதும் போல் காபியைச் சுவைத்தபடி பரபரப்பாகத் தன் நாளை ஒரு புதிய இளைஞனுடன் கைகுலுக்கித் துவக்கிக்கொண்டது.அம்பேத்கரு�
�்குள் இனம்புரியாத மன எழுச்சி. என்னவென்றே விவரிக்கத் தெரியாத உற்சாகம்!

காரணம்…

-சரித்திரம் தொடரும்





அம்பேத்கரின் ஆரம்பக் கல்வி

5 09 2008

சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல,
சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!

-ஏங்கல்ஸ்

காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தறுவாயில்இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும், இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். ”உன்னால்இந்த அடைமழையில் பள்ளிக்குச் செல்ல முடியுமா?” எனச்சவால் விட்ட.னர். அடுத்த நொடியே, எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல் லாம் தனது புத்தகப் பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ, அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற் கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துசென்றான். ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்துகிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப் பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத் துடன் நின்றுகொண்டு இருந்தாள். ”நீ ஒரு மகார்! என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்?” என இரைந் தாள். அந்தக் கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது.

தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என கிராமத்திலிருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு வித மான ரூபங்களில் தன் குழந்தை களைப் பயமுறுத்தி வருவதைக் கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்பக் கல்விகள் முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளி யில் தன் மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவு களிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண் டார். அதன்படி, பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.

ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர் களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட் டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத் துப் போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாட கைக்கு ஒரு மாட்டுவண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்… வண்டிக்கார னுக்கு தான் மகார் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரிய வர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத் தடுமாறி, ஒரு வழியாக காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப் பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்புவேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.

இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமை யுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ் கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.

அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளி யானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல்முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. ‘நமது சமூகத்தில் முதல்முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்’ என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து, எந்த மாணவ னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிச ளிக்கப் போகிறோம் என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

விழாவில், சிறுவன் அம்பேத் கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்க் கட்டியணைத்துப் பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியைக் கண்டு, ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். பின்னாளில் அந்தப் புத்தகம்தான் அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்கப் போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது!

-சரித்திரம் தொடரும்





அம்பேத்கர்

5 09 2008

கல்வியின்மையால் அறிவை இழந்தோம்;
அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;
வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து
இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!

-ஜோதிராவ் புலே (1890)

மகாராஷ்டிராவில் கொங்கன் மாவட்டத்தின் டபோலி எனும் சிறு கிராமம். அதிகாலைப் பனி விலகாத வயல்வெளிக்கிடையே பாம்பு போல வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஒரு ஜோடிப் பிஞ்சுக் கால்கள் தாவிக் குதித்து ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப் பள்ளியின் முதல் நாள். அதனாலேயே, தந்தை மகன் இருவருக்குள்ளும் கரை காணாத உற்சாகம்.

ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம் வடிந்து, வகுப்பறையைவிட்டு வெளியேறியது. காரணம், சக மாணவர்களுடன் சரி சமமாக உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவன் மகார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம். மீறி அந்தச் சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால், வகுப்புக்கு வரும்போது புத்தகப் பையுடன் ஒரு கோணிச்சாக்கையும் கொண்டுவரும்படி வேண்டா வெறுப்பாக உத்தரவிட்டார் ஆசிரியர்.

அன்று, அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். ‘நாம் தீண்டத்தகாதவர்கள். நாம் சார்ந்திருக்கும் இந்து மதம் நம்மை அப்படித்தான் மற்றவர்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி இருக்கிறது’ எனத் தன் மகனுக்கு பிற்பாடு விளக்கினார் அவனது தந்தை. அன்று இரவு, அந்தச் சிறுவனின் கன்னங்களில் நீர் வழிந்தது.

மறுநாள், ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கித் திரும்பியது. அங்கே, அந்தச் சிறுவன் கையில் கோணிச்சாக்குடன் நின்றிருந்தான்.

1947… ஐம்பது ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியுடன் இப்போது அந்தச் சிறுவன் கோட் சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டுமொத்த இந்தியாவே அவனது வருகைக்காக நாடாளுமன்றத்தில் திரும்பிப் பார்த்தது. இப்போது அவன் கையில் கோணிச்சாக்கு இல்லை… மாறாக, கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானித்த இந்திய அரசியல் சாசனச் சட்டம் அந்தக் கோப்பில் இருந்தது.

தாழ்த்தப்பட்டவர்களின் மீதான அடிமைத்தளையைக் கல்விஎனும் வெடி வைத்துத் தகர்த்த வீரனாகவும், இந்து மதத்தின் 2,500 வருட மனக் கசடான மனு எனும் அதர்மத்தை விரட்டியடித்த அறிவுச் சுரங்கமாகவும், இந்தியாவின் அக விடுதலைக்காகத் தனது காலத்தை விதையாக்கிப் போராடி வெற்றித் திருமகனாக வாழ்ந்த தியாகி… டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

அம்பேத்கரின் வாழ்க்கை தவிர்க்கவே முடியாமல் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து துவங்குகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழும் நிமித்தம் நாடோடிகளாக வந்த புதிய இனத்தவரான ஆரியர்கள், பொருளீட்டும் வாழ்வில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவின் பூர்வகுடிகளை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. தங்களை எதிர்ப்பிலிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டாக, சமூகத்தை நான்காகப் பிரித்தனர். பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்பதாக அதிகாரத்தின் படிகளை அவர்களே அமைத்தனர். அதற்கான காரணங்களை வடிவமைக்க, கடவுளும் மதமும் உருவானது. அதனை நம்பவைக்க வேதங்களும், புராணங்களும், கதைகளும் உருவாக்கப்பட்டன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் இறுக இறுக, அதிகாரம் சூத்திரர்களை மேலும் மேலும் ஒதுக்கிக்கொண்டே போனது.

உலகில் எந்த நாட்டிலும், ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும், வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக்கொள்வது அவனது அறிவையும் நடத்தையையும் பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில் பிறக்கும்போதே அது தீர்மானிக்கப்பட்டு, வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும் தாழ்ந்தவனாக கருதப்படும் இழிநிலை கட்டமைக்கப்பட்டது. இதனால், அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டன; அறிவு பிடுங்கப்பட்டது; அவர்களுக்கான வாழ்நிலம் பிடுங்கப்பட்டது; ஆடைகள் பிடுங்கப்பட்டன; சுதந்திரமும் பிடுங்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்த இழிநிலையிலிருந்து தன்னையும் தனது சமூகத்தையும் விடுவிக்கத் தோன்றிய விடிவெள்ளியாக, டாக்டர் அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் மாஹ¨ எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தையார் ராம்ஜி சக்பால். மகாராஷ்டிரத்தில் கொங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவடே எனும் சிறு கிராமம்தான் அவரது பூர்விகம். ராம்ஜியின் வம்சாவளியினர் மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளான மகார் இனத்தைச் சேர்ந்தவர்கள். துவக்க காலத்தில் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்த காரணத்தால்தான் மகா(ர்)ராஷ்டிரம் என்ற பெயர் இந்த நிலப்பரப்புக்கு உருவானது.

ஓங்குதாங்கான மகார்களை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி, தன் படைவீரர்களாகச் சேர்த்துக்கொண்டது. அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பாலும் அந்தப் படையில் சுபேதாராகப் பணிபுரிந்துவந்தார். இதனாலேயே, ராம்ஜி சக்பாலுக்கு ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீமா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிந்தது. ராம்ஜி சக்பாலுக்குத் தனது மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். வரிசையாகப் பிறந்தன பதினாலு குழந்தைகள். அதில், பதினான்காவதாகப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என யோசித்த ராம்ஜிக்கு, சட்டெனத் தோன்றியது மகாபாரத பீமனின் உருவம். அடிப்படையில், தீவிர பக்திமானான அவர், ஒரு குத்துச்சண்டை பிரியரும்கூட. அதன் காரணமாக, தனது மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் என அவனுக்குப் பெயர் சூட்டினார்.

பீமுக்கு இரண்டு வயதானபோது, சுபேதார் ராம்ஜி சக்பாலின் வாழ்வில் ஒரு திடீர் சோதனை. இனி மகார்களைப் படைப் பிரிவில் சேர்க்கக் கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்ததால், ராம்ஜியின் வேலை பறிபோனது. மீண்டும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் டபோலிக்கே குடும்பத்துடன் இடம்பெயர்ந்த ராம்ஜிக்கு அந்த இடமும் கசந்தது. காரணம், அங்கும் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமை. தீண்டாமை எனும் பேய் அந்த ஊரையே நோய்க்கூறாகப் பற்றியிருந்தது. தனது பிள்ளைகள் பள்ளி சென்று முறையான கல்வியைப் பெறுவதற்குக்கூட அங்கிருந்த ஆசிரியர்களும் இதர சாதிகளைச் சேர்ந்த மக்களும் தடையாக இருப்பதைக் கண்டு ராம்ஜி வேதனைகொண்டார். தன் பிள்ளைகள் தினம்தினம் கோணி சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் தீண்டாமையின் வேதனை தீண்டிவிடக் கூடாது என உணர்ந்த ராம்ஜி, சிறிது காலத்திலேயே தனது குடும்பத்தை சதாரா நகரத்துக்கு மாற்றிக்கொண்டார். சதாராவுக்கு அவர்கள் குடி பெயர்ந்ததுமே, குடும்பத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, ராம்ஜி சக்பாலின் மனைவி பீமாபாயின் திடீர் மறைவு. ராம்ஜியால் அந்தத் துக்கத்திலிருந்து அத்தனை சுலபமாக வெளிவர முடியவில்லை. இன்னொன்று, அதற்கு ஆறுதலான விஷயம். அது, ராம்ஜிக்குக் கிடைத்த ஸ்டோர் கீப்பர் வேலை. இனி, தனது குழந்தைகளுக்குக் கௌரவமான படிப்பைத் தர முடியும் எனும் நம்பிக்கை வந்தது.

அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆங்கில வகுப்பில் தனது மகனைச் சேர்த்தார் ராம்ஜி. என்னதான் இடம் மாறினாலும் சாதி துவேஷம் அங்கும் அதிகம் இருந்தது. தனது பிள்ளைகளுக்கு இங்கும் அந்த வேதனையின் நிழல் படிந்துவிடக் கூடாது என நினைத்தார் ராம்ஜி. அவரது எண்ணத்தை தலைகீழாக மாற்றுவதற்கென்றே அன்று வந்தது ஒரு மழை!

-சரித்திரம் தொடரும்





அம்பேத்கரின் சிறுவயது (சில) அனுபவங்கள்

5 09 2008


“நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார்.அப்போது அம்பேத்க்கர் படித்துக்கொண்டிருந்தார்.”காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்,நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார். அவர்கள் சமுதாயம் விழித்துக்க்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள்தூங்கப்போய்விட்டார்கள்.என்னுடைய சமுதாயம் தூங்கிக்கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.”
இதோ டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை கடலில் இருந்து சில துளிகள்..!

காலையில் மழை சோவெனெ கொட்டத்தொடங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்கு புறப்படும் தருவாயில் இருந்த சிறுவகள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுல் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும் இன்று எப்படியும் பள்ளிக்கு செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக்கேட்ட மற்ற சிறுவர்கள் பீமை கேலி செய்தனர். ‘உன்னால் இந்த அடைமழையில் பள்ளிக்கு செல்ல முடியுமா’ என சவால் விட்டனர். அடுத்த நொடியே எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினான். எப்படியெல்லாம் தனது புத்தகப்பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட படி பள்ளியை நோக்கி விறுவிறு என நடந்து சென்றான்.

ஓரிடத்தில் மழை மிக கடுமையாக கொட்டத்தொடங்க, அருகில் இருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமை பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்து கிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப்பையினுள் இப்போது நீர் முழுவதுமாக புகுந்து இருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னும் அந்த பெண்மணி ஆவேசத்துடன் நின்று கொண்டிருந்தாள். நீயொரு மகார். என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்? என இரைந்தாள். அந்த கொட்டும் மழை ஈரத்தையும் மீறி தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது. தனது குழந்தைகளை எந்த பேய் நெருங்கிவிடக்கூடாது என கிராமத்தில் இருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு விதமான ரூபங்களில் தன் குழந்தைகளை பயமுறுத்தி வருவதை கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்ப கல்வி முடிந்து உயர் நிலை கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளியில் தன் மகனை சேர்க்க சென்ற போது இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத்தொந்ததரவுகளில் இருந்து மகனை பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண்டார். அதன் படி பீம் எனும் அவன் பெயருக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப்பெயரான சக்பாலை எடுத்து விட்டு பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரை சேர்க்க முடிவு செய்து இருந்தார். அந்த பெயர் தான் ‘அம்பேத்கர்’

இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும் போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்த பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான். ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகராஷ்ட்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர் தன் பிள்ளைகளை அவர்களின் அத்தையின் பொறுப்பில் விட்டு விட்டு அங்கே சென்று விட்டார். விடுமுறை நாளின் போது அம்பேத்கர் அவரது சகோதரர் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையை சந்திக்க வேண்டி காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மைசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ இவர்களை அழைத்துப்போக ரயில் நிலையத்துக்கு தந்தை வரவில்லை. மூவரும் வாடகைக்கு ஒரு மாட்டு வண்டியை பிடித்து காரேகான் செல்லத்தயாராகினர். பாதித்தொலைவு சென்று இருப்பார்கள். வண்டிக்காரனுக்கு தான் மகார் இனச்சிறுவர்களை ஏற்றிச்செல்கிறோம் என்பது தெரிய வர சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியை குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கு இடையே மூவரும் தட்டுத்தடுமாறி ஒரு வழியாக காரேகானுக்கு சென்று சேர்ந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்ததாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்க சென்ற போது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடிபாதி வெட்டப்பட்ட நிலையில் அறைகுறையாக இறக்கி விடப்பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து சகோதரிகளால் மீதமுள முடி திருத்தப்பட்ட சம்பவம் என சிறு வயதிலே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்று தான் இவை அனைத்திற்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாக படிப்பில் நாட்டம் செலுத்த தொடங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும் இனிமையான சுபாவத்தாலும் எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்று நோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி அவரை மனதளவில் பள்ளியில் இருந்து விலகி இருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்கு தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால் அந்தக்குறையை புத்தங்கள் போக்கின. ஒரு நல்ல நூலை காட்டிலும் சிறந்த நட்பு வேறு எதுவாக இருந்து விட முடியும்? சமயம் கிட்டும் போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாக செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்க தொடங்குவார். இப்படி சிறு வயதிலே ஆழ்ந்த சிந்தனையும் தனிமையுமாக காணப்பட்ட அந்த சிறுவனை, அந்த பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள் தோறும் கவனிக்க தொடங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அருச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹை ஸ்கூலில் தலமை ஆசிரியரான அவர் அப்போதே அந்த சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். அந்த வருட மெட்ரிக்குலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளியான போது தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஒருவன் முதல் முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்ற மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. ‘நமது சமூகத்தில் முதன் முறையாக ஒருவன் செய்து இருக்கும் சாதனையை நாம் கொண்டாட வேண்டும்” என அந்த மக்கள் முடிவு செய்து அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள்.
அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து எந்த மாணவனை பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்கு தான் நாம் பரிசளிக்க போகிறோம் என்பதை அறிந்த அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.விழாவில் சிறுவன் அம்பேத்கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் கட்டி அணைத்து பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியை கண்டு ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். பின்னாளில் அந்த புத்தகம் தான அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்க போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது.





பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி அம்பேத்கர்

5 09 2008

ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.

பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்’ என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல் .

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

————— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலிலிருந்து – பக்கம் 215-216





சுதந்திர மனிதன் ??

25 03 2008
”எவன் ஒருவன் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றானோ; எவன் ஒருவன் சூழ்நிலைக் கைதியாய் இ­ல்லாமல் பொறுப்புணர்ந்து கடமை ஆற்றுகின்றானோ; எவன் ஒருவன் கிளர்ந்து எழுகின்ற மனத்தின்மையைப் பெற்றிருக்கின்றானோ – அவனையே சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் முன்னோர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல், பழம் போதனைகள் என்பதற்காக – அவற்றினை அப்படியே ஏற்காமல் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறானோ – அவனை நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல், எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இ­ருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இ­ருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் மற்றவர்களைப் போல வாழ்க்கையை நடத்தாமல் தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணி – அதன்படி வாழ்கின்றானோ அவனையே நான் சுதந்திரம் பெற்ற மனிதன் என்பேன்.

இ­துவரை கூறப்பட்ட கருத்துகளின்படிப் பார்த்தால் நீங்கள் சுதந்திர மனிதர்களா? உங்கள் ‘லட்சியங்களை வடித்துக் கொள்ள, உங்களுக்கு சுதந்திரம் ­இருக்கின்றதா? உங்களுக்குச் சுதந்திரம் இ­ல்லாதது மட்டுமல்ல; நீங்கள் அடிமையிலும் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஈடு இ­ணையே ­இல்லை என்பேன்.”

­இவ்வாறு சுதந்திரமனிதன் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். ­இதுவரை ­இந்தியாவில் உருவான அரசியல் தலைவர்களுள் ­இவர் தனித்துவமானவர். விடுதலை அரசியல் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தனை செய்த புலமையாளர். சமூகநீதி ­இழைக்கப்படுவதற்கும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கும் மூலகாரணம் சாதியமைப்பும் தீண்டாமைக் கொடுமையும்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

ஒரு மனிதனுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கக் கூடாதோ, அவை அனைத்தும் இ­ந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களாகப் பிறந்தவர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. உலக மனித உரிமைப் பிரகடனத்தின் உரிமைகள்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.

சாதீய ஒழிப்பு சமூகநீதி ஆகியவற்றை முன்வைத்து போராடுவதற்கு விழிப்புணர்வு பெறுவதற்கு அம்பேத்கர் தனது சொல்லாலும் செயலாலும் ஓர் வழிமுறையை பாதையை வகுத்துக் காட்டியுள்ளார்.

”சுதந்திர ­இந்தியாவில் நம்முடைய நிலை என்ன? நான் இ­ந்தக் கேள்வியை காந்தியிடமும் காங்கிரஸ தலைவர்களிடமும் எழுப்பினேன். சுதந்திர இ­ந்தியாவில் எங்கள் பிள்ளைகள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்களா? எங்கள் மக்கள் சுதந்திர குடிமக்களாக ­இந்தியாவில் வாழமுடியுமா? காந்தியோ பிற தலைவர்களோ ‍ ­இக்கேள்விகளுக்கு நேரடியாகவோ, நிறைவான பதிலையோ அளிக்கவில்லை” என்பதை அம்பேத்கர் 1952ல் நடைபெற்ற முதல் தேர்தலையொட்டி 27.10.51 அன்று ஜலந்தரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

ஆனால் ­இன்று எத்தனையோ தேர்தல்களை கண்டுவிட்டோம். எத்தனையோ ஆட்சிகள் வந்து போய்விட்டன. ஆயினும் அம்பேத்கர் அன்று காந்தியிடம் காங்கிரஸகாரர்களிடம் எழுப்பிய கேள்வியைத் தான் ­இன்றுகூட கேட்க வேண்டியுள்ளது. பதில் மட்டும் ­இல்லை. அத்தகைய பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்கூட எவருக்கும் இ­ல்லை.

ஆட்சி அதிகாரம் முதல் அரசு நிர்வாகம் ஈறாக ஆதிக்க கருத்தியல்நிலை ­இறுக்கமடைந்துதான் உள்ளது. சாதியக் கண்ணோட்டம் எங்கும் ­இயல்பாகவே படர்ந்துள்ளது. சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் மிக மோசமாக நடத்தப்படும் கொடுமைகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களின் உயிரைக்கூட ஆதிக்க சாதியினர் பறித்துவிட முடியும். அவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிடாது. ஆதிக்க சாதியினரைப் பாதுகாக்கவே இ­ந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட்டது போன்று தான் ­இன்று நிலைமைகள் உள்ளன. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் தான் தமது தலையாய கடமை உள்ளது என்று நினைத்து செயற்படுகிறார்கள்.

அம்பேத்கர் விதைத்த சீரிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் சுதந்திரத்துக்கு பின்னர் உருவான சமூக-அரசியல் சக்திகளால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டு வரவில்லை. ­இதனால் அம்பேத்கருக்கு பிந்திய தலித் இ­யக்கங்கள் இ­ந்திய அரசியலில் சமூகமாற்றத்தில் முழுமை தாக்கத்தை செலுத்த முடியாமல் போய்விட்டது. அல்லது ஆதிக்க சாதியினரின் பலம் அதிகாரம் ஆதிக்கம் தலித் இ­யக்கங்களை நசுக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தலித் இ­யக்கங்கள் தோன்ற வேண்டிய செயற்பட வேண்டிய தேவையை ஒவ்வொரு கணமும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அம்பேத்கர் நூற்றாண்டு அம்பேத்கரை மீள்கண்டுபிடிப்பு செய்யவேண்டிய சமூக நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்பேத்கரின் சிந்தனையும் செயற்பாடும் விரிவான தாக்கங்களுக்கு உள்ளாகியது. ­இருபதாம் நூற்றாண்டின் ­இறுதிப் பத்தாண்டுகள் தலித் பிரச்சனையை சுற்றிச் சுழன்று வரக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியது. ­இலக்கியம், கலாசாரம், வரலாறு, அரசியல் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ‘தலித் சிந்தனை’ ‘தலித் விடுதலை அரசியல்’ பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.

அம்பேத்கர் முன் வைத்த சிந்தனைகளும் விவாதங்களும் சமூக மாற்ற சக்திகளுக்கு புதிய பொருள் கோடல் முறைமைக்கு தயார் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆதிக்க சாதியினரின் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை தெளிவை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் களத்தில் இ­யங்கும் தேர்தல் கட்சிகளும் தலித் அரசியலை சந்தர்ப்பவாதமாகக்கூட அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்காரை முன்னிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்கு தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்க போராட வேண்டிய சுயத்துவத்தை அம்பேத்கர் பலவாறு உணர்த்தியுள்ளார்.

இ­ந்தியப் பின்புலத்தில் உருவான சிந்தனையாளர்களில் புரட்சியாளர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. சமூகநீதிக்கும் சாதிய ஒழிப்புக்கும் அம்பேத்கர் பெயர் ஓர் ஆயுதமாகவே ­இருக்கும். ­இந்தியா போன்ற சாதியச் சமூக அமைப்பில் அம்பேத்கர் புரட்சிக்கனலாகவே விளங்குகிறார்.

நன்றி திரு.மதுசூதனன்





அம்பேத்கர்

25 03 2008

457.jpgal68.jpg

நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார்.அப்போது அம்பேத்க்கர் படித்துக்கொண்டிருந்தார்.”காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்,நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்ரு செய்தியாளர் வியந்து கேட்டார்.
அவர்கள் சமுதாயம் விழித்துக்க்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்.என்னுடைய சமுதாயம் தூங்கிக்கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.





ஜனநாயக அரசு வேண்டுமெனில் சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்

17 03 2008

பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.

 முதல் தவறு : அரசு என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறானது, தனிப்பட்டது என்று நம்புவது. உண்மையில் அரசு, சமூகத்திலிருந்து வேறானதும், தனிப்பட்டதும் அல்ல. அரசு என்பது சமூகத்தின் பல அமைப்புகளில் ஒன்று. சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளில் சிலவற்றைச் செய்யுமாறு சமூகம் அரசுக்கு குறிப்பிட்டுக் கொடுக்கிறது.

இரண்டாவது தவறு, ஓர் அரசு சமூகத்தின் இறுதி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அரசு வேரூன்றியிருக்கும் சமூகம் ஜனநாயக சமூகமாக இருந்தாலன்றி இது நடவாது என்பதையும் உணரத் தவறுவது. சமூகம் ஜனநாயக முறையில் இல்லையென்றால், ஓர் அரசு ஜனநாயக அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. சமூகம் இரண்டு வர்க்கங்களாக, ஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அரசாகத்தான் இருக்கும்.

மூன்றாவது தவறு! அரசு நல்லதாக இருக்குமா, கெட்டதாக இருக்குமா, ஜனநாயகமாக இருக்குமா, அல்லது ஜனநாயகமற்றதாக இருக்குமா என்பது, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை, குறிப்பாக சிவில் சர்வீஸ் அமைப்பைப் பொறுத்தது என்பதை மறந்துவிடுவதாகும். சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்கள் எத்தகைய சமூகச் சூழலில் வளர்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். சமூகச் சூழல் ஜனநாயகமற்றதாக இருந்தால், அரசும் ஜனநாயகமற்றதாகவே இருக்கும்.

ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜனநாயக வடிவிலான அரசு ஆபத்தான அரசாக மாறிவிடக்கூடும்.

ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு உணர்வு பெற்று, தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலனுக்கு மேலாகக் கருதினால், தன்னுடைய வகுப்பின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தையும் நீதியையும் வக்கிரமாகப் பயன்படுத்துவதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த நோக்கத்துக்காகத் தன்னுடைய வகுப்பைச் சாராத மற்றவர்களுக்கு எதிராக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால், ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய முடியும்? வகுப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு, சமூக விரோத உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் அதிகமாக இருந்தால் அரசு நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்யும் கடமையை நிறைவேற்றுவது கடினம்.

இப்படிப்பட்ட சமூகத்தில், அரசு தன் வடிவத்தில் மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. அது ஒரு வகுப்பால், ஒரு வகுப்புக்காக நடத்தப்படும் அரசாகவே இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.

இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர்கள் சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும். நல்ல அரசின் பணி எந்த அளவுக்கு அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் பொறுத்துள்ளது என்பது உணரப்படாதது வருந்தத்தக்கது. ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்ல; அது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர் ஜனநாயக சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 4, பக்கம் : 282

நன்றி:தலித்முரசு

 





பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறுவதால் சுரண்டல் முடிவுக்கு வந்து விடுமா? – VII

3 03 2008

Ambedkar மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். திரண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கம் அரசியலே வேண்டாம் என்று சபதம் எடுத்துக் கொள்வதால், அந்த வர்க்கமே அழிந்து போகும் என்றுதான் சொல்வேன். நாம் இதுவரை சமூக சீர்திருத்தத்தை நோக்கியே நமது முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அவற்றைப் பொருளாதாரச் சீர்திருத்தம் நோக்கியும் செலுத்த வேண்டிய அவசியத்தை நாம் மறந்திருந்தோம் அல்லது அரைகுறையாகக் கருத்தில் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் அனுபவித்த எல்லா கொடுமைகளுக்கும் மூல காரணம் பொதுவானது. நம்மீது சமூக, பொருளாதார ஆதிக்கம் செலுத்துபவர்கள் நமக்குச் சொந்தமான, நம் கையில் இருக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டதுதான் அந்த மூல காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலுக்கு வருவெதன்றால் கட்சி அமைத்துக் கொள்வது என்று பொருள். கட்சிப் பின்னணி இல்லாத அரசியல் வீண் வேலை. சுயேச்சையாக இருப்பேன் என்று சில அரசியல்வாதிகள் சொல்லலாம். அவர்கள் தங்கள் நிலத்தை தனிமையில் உழுது கொண்டு இருக்க வேண்டியதுதான். அத்தகைய அரசியல்வாதிகளை நான் எப்போதுமே நம்புவது இல்லை. யாரோடும் சேர முடியாத ஓர் அரசியல்வாதி, எந்தப் பயன் நடைமுறை நோக்கத்துக்கும் பயன்பட மாட்டான். அவனால் எதையும் சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில் ஒரு புல்கூட முளைக்காது. பெரும்பாலான அரசியல்வாதிகள் சுயேச்சையாக இருக்க நினைப்பது, அவர்களுடைய அறிவு நேர்மையால் அல்ல; தங்களுக்கு அதிக விலை நிர்ணயித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதற்காகத்தான். இதற்காகத்தான் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுதந்திரமாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசியலில் சுயேச்சை பற்றிய என் மதிப்பீடும், அனுபவமும் இதுதான்; கட்சியில்லாமல் அர்த்தமுள்ள அரசியல் நடத்த முடியாது என்பதே என் கருத்து.

எந்தக் கட்சியில் சேருவது என்பது அடுத்த கேள்வி. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. காங்கிரசில் சேரலாமா? அப்படிச் சேர்ந்தால் தொழிலாளி வர்க்கத்துக்கு உதவிகரமாக இருக்க முடியுமா? காங்கிரஸ் அல்லாத ஒரு தனி அமைப்பு, சுதந்திரமான அரசியல் அமைப்பு தொழிலாளர்களுக்குத் தேவை. இக்கருத்தைத் தொழிலாளர் தலைவர்கள் சிலர் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்பவர்கள், சோஷலிஸ்டுக்கான தொழிலாளர்கள் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும் என்னும் கருத்துடையவர்கள். அந்தத் தொழிலாளர் அமைப்பு காங்கிரசுக்குள்ளேயே செயல்படலாம் என்று அவர்கள் நினைக்கலாம். அதே போல் இன்னொரு பிரிவு, தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறது. அவர்களின் பிரதிநிதி திரு. ராய் அவர்களின் கருத்துப்படி, காங்கிரசுக்குள்ளேயும் சரி வெளியிலேயும் சரி, சொந்தமாகத் தனி அமைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பவர்கள் அவர்கள். இந்த இரண்டு பிரிவினரோடும் நாம் முற்றாக மாறுபட வேண்டும் எனக் கருதுகிறேன்.

நிறைய பேருக்கு திரு. ராய் ஒரு புதிர். எனக்கும் அப்படித்தான். ஒரு கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்குத் தனி அரசியல் அமைப்பு இருக்கக் கூடாது என்கிறார்! எத்தகைய மோசமான முரண்பாடு இது! இந்தக் கருத்து நிலையை கேள்விப்பட்டால், கல்லறையில் இருக்கும் லெனின்கூட புரண்டு படுப்பார். இந்திய அரசியலின் முழு முதல் நோக்கம், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது என்று சொல்லும் ராய் – இப்படி ஒரு கருத்து நிலைக்கு எப்படிதான் நியாயம் கற்பிப்பாரோ? அவரது கருத்தில் எந்தப் பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏகாதிபத்தியம் மறைந்தால், இந்திய முதலாளித்துவமும் அடையாளம் தெரியாமல் நொறுங்கிவிடும் என்பதை நிரூபித்தால், ராயின் கருத்தை நாம் ஏற்க முடியும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுப் போய் விடுகிறார்கள் என்றாலும் இங்கிருக்கும் நிலப்பிரபுக்களும், ஆலை முதலாளிகளும் வட்டி வணிகர்களும் மக்களைச் சுரண்டுவது நின்று விடவா போகிறது? இந்த அடிப்படை எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. வெள்ளைக்காரன் போன பிறகும் தொழிலாளி தன்னுடைய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடித்தான் தீர வேண்டும். அதற்காக அவன் அமைப்பு அடிப்படையில் திரள்வது அவசியத்திலும் அவசியம். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இதைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஏகாதிபத்தியத்தைப் போலவே முதலாளித்துவத்தோடும் போரிட வேண்டும். அதற்காக ஒன்று திரள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படித் திரளும் தொழிலாளர் அமைப்பு, காங்கிரசின் உள் அமைப்பாகத்தான் இயங்க வேண்டும் என்னும் நிபந்தனையை யும் அவர்கள் விதிக்கிறார்கள். காங்கிரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தக் கட்டாயக் கூட்டணியின் அவசியம்தான் எனக்குப் புரியவில்லை.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)

நன்றி:தலித்முரசு