பயணியர் விடுதியில் அம்பேத்கர்

6 09 2008

வெற்றுடம்பில் விழும் சாட்டையடிகள் வெறும் வலிகளோடு மறைகின்றன. அதுவே, நெஞ்சில் விழும் வார்த்தை அடிகள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஏணிப்படிகளாக மாறுகின்றன. அம்பேத்கரின் வாழ்வில், அன்று இரவுபார்சி பயணியர் விடுதியில் ஏற்பட்ட அனுபவம் அத்தகையஏணிப் படிகளில் ஒன்று!

பார்சிகளுக்கு மட்டுமான அந்தப் பயணியர் விடுதியில் அம்பேத்கர் தங்க நேர்ந்ததேஒரு வேதனையான துர்ச்சம்பவம். அம்பேத்க ருக்கு பரோடா அரண்மனையில் வேலை கிடைத்ததே தவிர, தங்குவதற்கு இடமின்றி தெருத் தெருவாக அலைந்தார். தாழ்த்தப்பட்டவர் என்னும் ஒரே காரணத்துக்காக விடுதிகள் அனைத்தும் அவரை உள்ளே விடாமல் விரட்டியடித்த நெருக்கடியான சூழலில்தான், பார்சி களுக்கான இந்த விடுதி பற்றி அம்பேத்கர் கேள்விப்பட்டார். பார்சிகள் பின்பற்றும் ஜொராஷ்டிர மதத்தில் சாதிகள் இல்லை; அதனால், அவர்கள் தன்னை வெளியேற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கே சென்ற அம்பேத்கருக்குப் பின்னர்தான் தெரிந்தது, அங்கும் சாதி விஷம் தலையில் ஏறியிருக்கும் விவரம். தொடக்கத்தில் இடம் தர மறுத்த விடுதிப் பணியாளர், பின்பு அம்பேத்கரின் நிலை அறிந்து மனமிரங்கி, ஒரு சமரசத்துக்கு வந்தார். யாராவது கேட்டால் பார்சி இனத்தவன் என்று தன்னைச் சொல்லிக்கொள் ளும்படி அவரை அறிவுறுத்தி, அப்படியே குறிப்பேட்டிலும் பதிவு செய்துகொண்டு, அங்கே தங்க இடம் தந்தார். வேறு வழியே இல்லாத காரணத்தால், தன் மனசாட்சிக்கு தானே ஒரு முகமூடி அணிந்துகொண்டு அந்த விடுதியில் குடியேறினார் அம்பேத்கர். எங்கே யாருடனாவது பேசினால், தான் பார்சி இனத்தவன் இல்லை எனத் தெரிந்துவிடுமோ என்று பயந்து, யாரும் விழிப்பதற்கு முன்பே வெளியேறி, அனைவரும் உறங் கிய பின்பு விடுதிக்குத் திரும்பு வதை வழக்கமாகக் கொண்டார்.

ஒருபுறம், அரண்மனையில் தனக்குக் கீழ் பணிபுரியும்படிப் பறிவற்ற ஊழியர்களின் அவ மரியாதை; இன்னொருபுறம், எந்த நிமிடம் தான் யார் எனத் தெரிந்து, விடுதியிலிருந்து வெளியேற்றிவிடுவார்களோ எனும் பயம்..! இப்படியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் தணலில் இட்ட புழுவாக வெந்து துடித்தார் அம்பேத்கர். லண்டன், அமெரிக்கா என வெளிநாடு களுக்குச் சென்று எவ்வளவோ உயர்ந்த படிப்பு படித்தும், இந்தியா தன்னை இப்படி விலங்கினும் கீழாக மதித்து அவமானப்படுத்து கிறதே எனும் வேதனை ஒவ்வொரு நாளும் அவரை அரித்துத் தின்றது.

அன்றைய பொழுது அம்பேத் கருக்கு மோசமான நாளாக விடிந்தது. அவர் அங்கு வந்து தங்கி அன்றோடு பதினோராவதுநாள். எந்தத் தகவல், விடுதிக்காரர்களுக்குத் தெரியக் கூடாது என்று பயந்திருந்தாரோ, அந்தத் தகவல் எப்படியோ கசிந்துவிட, அனைவரும் கொதித்தெழுந்து கைகளில் கழி, கம்புகள் ஏந்தி, ‘இன்று அம்பேத்கரை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது’ எனும் முடிவோடு ஒன்று திரண்டனர்.

”உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் பார்சி என சொல்லிக்கொண்டு இங்கே நுழைந்திருப்பாய்! அயோக்கியனே… உன்னை யார் உள்ளே விட்டது? இந்த நிமிஷமே உன் பெட்டி படுக்கை களை எடுத்துக்கொண்டு இங்கி ருந்து ஓடிப் போ! இல்லாவிட்டால் உன்னையும் உன் பொருள்களை யும் தூக்கித் தெருவில் எறி வோம்!”

அவர்களின் கண்களில் கன லாகத் தகித்துக்கொண்டிருப்பது அந்த நிமிடத்திய கோபம் அல்ல; ஆண்டாண்டு காலமாக மதவாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்பட்ட சாதி எனும் நெருப்பின் சுடர் என்பதைப் புரிந்துகொண்ட அம்பேத்கர், அவர்களோடு விவா திக்கவோ சண்டையிடவோ விரும்பாதவராக, அன்று இரவே அங்கிருந்து காலிசெய்துவிடுவதாக ஒப்புக்கொண்டார். நாள் முழுக்க தங்குவதற்கு இடம் தேடி அலைந் தார். பரோடாவில் இருந்த தன் நண்பரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் தன் நிலைமையைச் சொன்னார். ”நீ இங்கு வந்தால் என் வேலையாட்கள் வேலையைவிட்டுப் போய்விடுவார்கள். தயவு செய்து வேறு இடம் பார்த்துக்கொள்!” என்று கூறி, அம்பேத்கரை நுழையவே விடாமல் கதவை அடைத்துக்கொண்டார் அந்த மெத்தப் படித்த பண்பாளர்(!).

‘இனி, பரோடாவில் வேலை செய்ய முடியாது. காலை ரயிலில் பேசாமல் ஊருக்கு வண்டி ஏறி விட வேண்டியதுதான்!’ என முடிவெடுத்த அம்பேத்கருக்கு, அந்த நட்ட நடு இரவில் அடுத்து எங்கே சென்று அந்த இரவைக் கழிப்பது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அங்கிருந்த ‘கமோதி பாக்’ பொது பூங்காவில் நுழைந்தார். இரவுகளில் தினமும் ஆடு மாடுகளுக்கும், நன்றியுள்ள சில பிராணிகளுக்கும், போக் கிடமற்ற பிச்சைக்காரர்களுக்கும் மட்டுமே உறங்க இடம் தந்து கொண்டு இருந்த அந்தப் பூங்கா, இந்தச் சமூகத்தால் குத்திக் குத்திப் புண்ணாகிப்போன இதயத்துடன் நுழைந்த அம்பேத்கரையும் அரவ ணைத்துக்கொண்டது.

மறுநாள், அதிகாலையிலேயே விடுதியிலிருந்து தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் அம்பேத்கர்.அவரது கால்கள் நிதானமாக ரயில் நிலையத்தை நோக்கி நடந்தன. கைகளில் தொங்கிக்கொண்டு இருந்த பெட்டியை விட, மனது அதிகமாக கனத்தது. இனி, தன் வாழ்க்கை தனக்கானதல்ல, தன் மக்களுக்கானது எனும் உறுதியானதொரு முடிவை மேற்கொண்டார். எதிர்காலம் அவரை நல்ல முறையில் வரவேற்கத் தயாராக காத்திருப்பதாக, தொலைவில் ரயில் கூவி சமிக்ஞை செய்தது.

1920, நவம்பர். லண்டன் துறைமுகத்தில் ஒதுங்கி நின்ற கப்பலிலிருந்து இறங்கினார் அம்பேத்கர். லண்டன் கிரேஸ்கல்லூரியில் முன்பு பாதியில் விட்ட படிப்பை தொடரப்போகும் உற்சாகம், அவரது முகத்தை வசீகர மாக்கியிருந்தது.

இடைப்பட்ட நாளில், காலம் சில துரிதமான மாறுதல்களை அவரது வாழ்க்கைக்கு நல்கியிருந்தது. அவமானத்துடன் பரோடாவிலி ருந்து மீண்டும் பம்பாய் திரும்பிய அம்பேத்கர், அங்கிருந்த சைடன் ஹாம் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். ஒவ்வொருநாளும், பார்சிகள் தன் முன் கழி, கம்புகளை ஆட்டி மிரட்டிய சம் பவம் அவரது நெஞ்சில் நிழலாடிக் கொண்டு இருந்தது. தனக்கு நேர்ந்த இந்தக் கதி, தாழ்த்தப் பட்டவர் எவருக்கும் இனி ஏற்ப டாத வண்ணம், அவர்களிடத்தில் முதலில் விழிப்பு உணர்வையும், எதிர்த்துப் போராடும் துணிச்ச லையும் ஏற்படுத்த வேண்டும் என உறுதிபூண்டார். தீண்டத் தகாதவர்கள் எனக் கருதப்பட்ட வர்களின் இருப்பிடங்களுக்குத் தானே நேரடியாகச் சென்று, அந்த மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்தார். அம்பேத் கரின் வரவு, அதுவரை தூங்கிக் கிடந்த பல்வேறு மகர் அமைப்பு களுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.

இந்தத் தகவல்கள் ஹாப்பூரின் சிற்றரசரான சாகு மன்னருக்குத் தெரிய வந்தது. தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு இருந்த சாகு மன்னர், அம்பேத்கரைச் சந்திக்க விருப்பம் கொண்டார். இருவரது சந்திப்பின் விளைவாக, அடுத்த சில நாட்களில் புதிதாக ஒரு பத்திரிகை வெளியானது. அதில் வெளியான கட்டுரைகள், அம்பேத்கர் யார் என வெளியுலகுக்கு அடையாளம் காட்டின. அம்பேத்கரின் புகழ் மெள்ள மெள்ள பம்பாய் மாகாணத்தில் பரவத் தொடங்கியது. 1921ல் மான்கோன் எனும் இடத்தில் நடைபெற்ற தீண்டப்படாதோர் மாநாட்டுக்கு அம்பேத்கர் தலைவராக அறிவிக் கப்பட்டார். ‘அம்பேத்கர் உருவில் ஒரு மீட்பரைக் கண்டடைந்துள் ளீர்கள்’ என சாகு மகாராஜா அந்த மாநாட்டில் வெளிப்படை யாக அறிவித்தார். தொடர்ந்து, நாகபுரியில் நடைபெற்ற மாநாட்டில், அம்பேத்கரின் அறிவாற்ற லையும் நுணுக்கமான அணுகு முறையையும் கண்டு வியந்த சாகு மகாராஜா, அம்பேத்கரின் அறிவுக்கூர்மைதான் தாழ்த்தப் பட்ட மக்களின் பாதுகாப்பு அரணாக எதிர்காலத்தில் விளங்கப்போகிறது என்பதை உணர்ந்தார்.

பாதியில் நின்ற பொருளாதார படிப்பு பூர்த்தியானால், அது அம்பேத்கருக்கும் மகர் இனத் தவருக்கும் மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவுக்கே பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என சாகு மகாராஜா அன்று எடுத்த முடிவுதான், மீண்டும் அம்பேத்கரை லண்டன் கிரேஸ் இன் சட்டக் கல்லூரிக்குள் படிப்பைத் தொடர அனுமதித்தது. ஆனால், முன்புபோல அம்பேத்கரால் இம்முறை நிம்மதியாகப் படிப்பைத் தொடர முடியவில்லை. அவரின் கவனம் எல்லாம் இந்தியாவைச் சுற்றியே சுழன்றுகொண்டு இருந்தன.

அந்தச் சமயத்தில்தான், இந்தியப் பத்திரிகைகளில் ஒரு பெயர் திரும்பத் திரும்ப அடிபடுவதை அம்பேத்கர் கவனித்தார்.

அந்தப் பெயர்…

-சரித்திரம் தொடரும்