‘ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை.
சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!
- அம்பேத்கர்

முதலாம் வட்ட மேசை மாநாடு முடிவுக்கு வந்தபோது, இந்தியாவின் தேசியத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்திருந்தார் அம்பேத்கர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மண்ணிலேயே, அவர்களது ஆட்சிமுறையின் கோளாறுகளைக் கடுமையாகச் சாடினார். ”இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாகவும், கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகைக்கு ஈடாகவும் இருக்கக்கூடிய பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன். உங்களது ஆட்சி எம் மக்களுக்கு அளித்துவந்த வேதனைகள் போதும். காலங்காலமாக எம்மக்கள் மதத்தின் பேரால் அனுபவித்துவரும் துயரங்களிலிருந்து மீட்காமல், உங்கள் அரசு மேலும் அவர்களை இழிவுபடுத்தி வருவதை இனியும் எங்க ளால் சகித்துக்கொள்ள முடியாது. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவப் படையில் சேர உரிமை மறுக்கப்படுமானால், அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக் குத் தேவை இல்லை. இனி இந்தியா வில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக, மக்களே ஆள்கிற புதிய ஆட்சிமுறை வேண்டும். அந்த ஜன நாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் ஏனைய உயர் சாதியின ரைப் போல பூரண விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும்!” என உரத்துக் கூறினார். அம்பேத்கரின் துணிச்சலானப் பேச்சு உடன் வந்த சிற்றரசர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த, ஓர் அரசர் அழுதேவிட்டார். அவர், அமெரிக்கா
சென்று படிக்க அம்பேத் கருக்குப் பண உதவி செய்த பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட். நம் கையால் மண்ணில் ஊன்றிய விதையன்று சட்டென நாமறியாமல் செழித்து வளர்ந்து, கனிகளுடன் பூத்துக் குலுங்குவதைத் தற்செயலாகப் பார்க்கநேரிடுகிற போது எழுகிற பூரிப்பு அது.
மாநாட்டுக்கு வந்த இதர சிற்றரசர்கள் முன்னிலையில் அன்று இரவு அம்பேத்கருக்கு விருந்து கொடுத்து கௌரவப்படுத்திக் கட்டித்தழுவினார் மன்னர். அன்று முதல் இந்தியாவிலிருந்து வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் அம்பேத்கரை சற்று மரியாதையுடன் பார்க்கத் துவங்கினர். வட்ட மேசை மாநாட்டில்அம்பேத் கர் ஆற்றிய உரை குறித்து லண்டனிலிருந்து வெளியான ஆங்கில நாளேடுகள் புகழ்ந்தன. ‘வயது வந்தோருக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும்’ என்பன போன்ற அம்பேத்கரின் அதி முக்கியமான கோரிக்கைகள் குறித்து வியந்து எழுதின. ‘அம்பேத்கரின் உரையே மாநாட்டின் சிறப்பு!’ என இண்டியன் மெயில் நாளேடு எழுத, ஸ்பெக்டேட்டர் நாளேடு அதற்கும் ஒரு படி மேலாக, ‘அம்பேத்கர், இந்திய தேசியத் தலைவர்களில் தவிர்க்க முடியாத நபர்!’ எனப் புகழ் மாலை சூட்டியது.
பிப்ரவரி 27, 1931-ல் பம்பாய் பல்லார்டு துறைமுகத் தில் பெரும் ஜனத்திரளின் முன்னிலையில் வெற்றிப் புன்னகையுடன் கை அசைத்தபடியே கப்பலில் வந்து இறங்கினார் அம்பேத்கர்.

முதலாம் வட்ட மேசை மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்த வருடமே ஆங்கில அரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கான அழைப்பை வெளியிட்டது. சென்ற மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் சார்பாக, மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்த காங்கிரஸ் கட்சி இந்த முறை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றது.
காரணம், இடையில் ஏற்பட்டு இருந்த காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்றாலும், மூல காரணம்வேறொன் றாக இருந்தது. இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பைத் தீர்மானிக்கும் வட்ட மேசை மாநாட்டில் எங்கே தங்களது பங்களிப்பு இல்லாது போய்விடுமோ எனும் காங்கிரஸ் கட்சியின் அச்சமும், முதல் மாநாட்டுக்குப் பிறகு ஏற்பட்ட அம்பேத்கரின் பிரமாண்டமான அரசியல் வளர்ச்சியும்தான்.
காங்கிரஸ் கட்சி ஏன் அம்பேத்கரின் வளர்ச்சியைக் கண்டு பயப்படவேண்டும். அதற்கு சில காரணங்கள் இருந்தன. காங்கிரஸின் நோக்கம், தேச விடுதலை மட்டும்தான். ஆனால், அம்பேத்கருக்கோ தேச விடுதலையோடு சேர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டபூர்வமான அரசியல் விடுதலையும் முக்கியக் கடமையாக இருந்தது. அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியிலி ருக்கும்போதே அரசியல்ரீதியாக இதற்கு முடிவெடுக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இதனால் காங்கிரஸோடு கூட்டு சேராமல் தன்னிச்சையாகவே செயல்பட்டார். இவரது இந்தச் செயல்பாடு தங்களது போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வலு சேர்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கருதியது. தவிர்க்க முடியாத ஒரு புகை இருதரப்புக்கும் இடையே மெள்ள எழுந்து, பின் அது அம்பேத்கரின் மீதான வன்மமாக உருவெடுக்கத் துவங்கியது. அம்பேத்கர் செல்லும் இடங்களுக்கெல்லாம் காங்கிரஸார் கறுப்புக் கொடிகளைக் காண்பித்து கோஷம் எழுப்பினர். ஆனால், அது எதையும் கண்டு கலங்காதவராக இன்னும் உறுதியுடன் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்குத் தயாரானார் அம்பேத்கர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட மாநாட்டுக்கான அறிவிப்பில் முக்கியமான தலைவர்களின் பட்டியலில் சக்திவாய்ந்த இரண்டு பெயர்கள் இருந்தன. ஒன்று, அம்பேத்கர். இன்னொன்று காந்தி.
இந்த இரண்டு துருவங்களும் அதுவரை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருவரும் ஒன்றாக லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் சலசலப்பையும் இந்திய அரசியலில் உருவாக்கியது.
1931-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி… அம்பேத்கருக்கு 106 டிகிரி காய்ச்சல். நடுங்கும் விரல்களுடன் தனக்கு வந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்.
அந்தக் கடிதத்தை எழுதியிருந்தவர் காந்தி!
-சரித்திரம் தொடரும்
- நன்றி: விகடன்( அஜயன் பாலா)