அம்பேத்கர்

5 09 2008

கல்வியின்மையால் அறிவை இழந்தோம்;
அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;
வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து
இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!

-ஜோதிராவ் புலே (1890)

மகாராஷ்டிராவில் கொங்கன் மாவட்டத்தின் டபோலி எனும் சிறு கிராமம். அதிகாலைப் பனி விலகாத வயல்வெளிக்கிடையே பாம்பு போல வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஒரு ஜோடிப் பிஞ்சுக் கால்கள் தாவிக் குதித்து ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப் பள்ளியின் முதல் நாள். அதனாலேயே, தந்தை மகன் இருவருக்குள்ளும் கரை காணாத உற்சாகம்.

ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம் வடிந்து, வகுப்பறையைவிட்டு வெளியேறியது. காரணம், சக மாணவர்களுடன் சரி சமமாக உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவன் மகார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம். மீறி அந்தச் சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால், வகுப்புக்கு வரும்போது புத்தகப் பையுடன் ஒரு கோணிச்சாக்கையும் கொண்டுவரும்படி வேண்டா வெறுப்பாக உத்தரவிட்டார் ஆசிரியர்.

அன்று, அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். ‘நாம் தீண்டத்தகாதவர்கள். நாம் சார்ந்திருக்கும் இந்து மதம் நம்மை அப்படித்தான் மற்றவர்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி இருக்கிறது’ எனத் தன் மகனுக்கு பிற்பாடு விளக்கினார் அவனது தந்தை. அன்று இரவு, அந்தச் சிறுவனின் கன்னங்களில் நீர் வழிந்தது.

மறுநாள், ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கித் திரும்பியது. அங்கே, அந்தச் சிறுவன் கையில் கோணிச்சாக்குடன் நின்றிருந்தான்.

1947… ஐம்பது ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியுடன் இப்போது அந்தச் சிறுவன் கோட் சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டுமொத்த இந்தியாவே அவனது வருகைக்காக நாடாளுமன்றத்தில் திரும்பிப் பார்த்தது. இப்போது அவன் கையில் கோணிச்சாக்கு இல்லை… மாறாக, கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானித்த இந்திய அரசியல் சாசனச் சட்டம் அந்தக் கோப்பில் இருந்தது.

தாழ்த்தப்பட்டவர்களின் மீதான அடிமைத்தளையைக் கல்விஎனும் வெடி வைத்துத் தகர்த்த வீரனாகவும், இந்து மதத்தின் 2,500 வருட மனக் கசடான மனு எனும் அதர்மத்தை விரட்டியடித்த அறிவுச் சுரங்கமாகவும், இந்தியாவின் அக விடுதலைக்காகத் தனது காலத்தை விதையாக்கிப் போராடி வெற்றித் திருமகனாக வாழ்ந்த தியாகி… டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

அம்பேத்கரின் வாழ்க்கை தவிர்க்கவே முடியாமல் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து துவங்குகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழும் நிமித்தம் நாடோடிகளாக வந்த புதிய இனத்தவரான ஆரியர்கள், பொருளீட்டும் வாழ்வில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவின் பூர்வகுடிகளை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. தங்களை எதிர்ப்பிலிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டாக, சமூகத்தை நான்காகப் பிரித்தனர். பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்பதாக அதிகாரத்தின் படிகளை அவர்களே அமைத்தனர். அதற்கான காரணங்களை வடிவமைக்க, கடவுளும் மதமும் உருவானது. அதனை நம்பவைக்க வேதங்களும், புராணங்களும், கதைகளும் உருவாக்கப்பட்டன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் இறுக இறுக, அதிகாரம் சூத்திரர்களை மேலும் மேலும் ஒதுக்கிக்கொண்டே போனது.

உலகில் எந்த நாட்டிலும், ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும், வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக்கொள்வது அவனது அறிவையும் நடத்தையையும் பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில் பிறக்கும்போதே அது தீர்மானிக்கப்பட்டு, வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும் தாழ்ந்தவனாக கருதப்படும் இழிநிலை கட்டமைக்கப்பட்டது. இதனால், அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டன; அறிவு பிடுங்கப்பட்டது; அவர்களுக்கான வாழ்நிலம் பிடுங்கப்பட்டது; ஆடைகள் பிடுங்கப்பட்டன; சுதந்திரமும் பிடுங்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்த இழிநிலையிலிருந்து தன்னையும் தனது சமூகத்தையும் விடுவிக்கத் தோன்றிய விடிவெள்ளியாக, டாக்டர் அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் மாஹ¨ எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தையார் ராம்ஜி சக்பால். மகாராஷ்டிரத்தில் கொங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவடே எனும் சிறு கிராமம்தான் அவரது பூர்விகம். ராம்ஜியின் வம்சாவளியினர் மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளான மகார் இனத்தைச் சேர்ந்தவர்கள். துவக்க காலத்தில் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்த காரணத்தால்தான் மகா(ர்)ராஷ்டிரம் என்ற பெயர் இந்த நிலப்பரப்புக்கு உருவானது.

ஓங்குதாங்கான மகார்களை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி, தன் படைவீரர்களாகச் சேர்த்துக்கொண்டது. அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பாலும் அந்தப் படையில் சுபேதாராகப் பணிபுரிந்துவந்தார். இதனாலேயே, ராம்ஜி சக்பாலுக்கு ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீமா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிந்தது. ராம்ஜி சக்பாலுக்குத் தனது மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். வரிசையாகப் பிறந்தன பதினாலு குழந்தைகள். அதில், பதினான்காவதாகப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என யோசித்த ராம்ஜிக்கு, சட்டெனத் தோன்றியது மகாபாரத பீமனின் உருவம். அடிப்படையில், தீவிர பக்திமானான அவர், ஒரு குத்துச்சண்டை பிரியரும்கூட. அதன் காரணமாக, தனது மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் என அவனுக்குப் பெயர் சூட்டினார்.

பீமுக்கு இரண்டு வயதானபோது, சுபேதார் ராம்ஜி சக்பாலின் வாழ்வில் ஒரு திடீர் சோதனை. இனி மகார்களைப் படைப் பிரிவில் சேர்க்கக் கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்ததால், ராம்ஜியின் வேலை பறிபோனது. மீண்டும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் டபோலிக்கே குடும்பத்துடன் இடம்பெயர்ந்த ராம்ஜிக்கு அந்த இடமும் கசந்தது. காரணம், அங்கும் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமை. தீண்டாமை எனும் பேய் அந்த ஊரையே நோய்க்கூறாகப் பற்றியிருந்தது. தனது பிள்ளைகள் பள்ளி சென்று முறையான கல்வியைப் பெறுவதற்குக்கூட அங்கிருந்த ஆசிரியர்களும் இதர சாதிகளைச் சேர்ந்த மக்களும் தடையாக இருப்பதைக் கண்டு ராம்ஜி வேதனைகொண்டார். தன் பிள்ளைகள் தினம்தினம் கோணி சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் தீண்டாமையின் வேதனை தீண்டிவிடக் கூடாது என உணர்ந்த ராம்ஜி, சிறிது காலத்திலேயே தனது குடும்பத்தை சதாரா நகரத்துக்கு மாற்றிக்கொண்டார். சதாராவுக்கு அவர்கள் குடி பெயர்ந்ததுமே, குடும்பத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, ராம்ஜி சக்பாலின் மனைவி பீமாபாயின் திடீர் மறைவு. ராம்ஜியால் அந்தத் துக்கத்திலிருந்து அத்தனை சுலபமாக வெளிவர முடியவில்லை. இன்னொன்று, அதற்கு ஆறுதலான விஷயம். அது, ராம்ஜிக்குக் கிடைத்த ஸ்டோர் கீப்பர் வேலை. இனி, தனது குழந்தைகளுக்குக் கௌரவமான படிப்பைத் தர முடியும் எனும் நம்பிக்கை வந்தது.

அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆங்கில வகுப்பில் தனது மகனைச் சேர்த்தார் ராம்ஜி. என்னதான் இடம் மாறினாலும் சாதி துவேஷம் அங்கும் அதிகம் இருந்தது. தனது பிள்ளைகளுக்கு இங்கும் அந்த வேதனையின் நிழல் படிந்துவிடக் கூடாது என நினைத்தார் ராம்ஜி. அவரது எண்ணத்தை தலைகீழாக மாற்றுவதற்கென்றே அன்று வந்தது ஒரு மழை!

-சரித்திரம் தொடரும்





அம்பேத்கர்

25 03 2008

457.jpgal68.jpg

நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார்.அப்போது அம்பேத்க்கர் படித்துக்கொண்டிருந்தார்.”காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்,நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்ரு செய்தியாளர் வியந்து கேட்டார்.
அவர்கள் சமுதாயம் விழித்துக்க்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்.என்னுடைய சமுதாயம் தூங்கிக்கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.





என் மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாதவர்களுடன் ஒத்துழைத்தேன்

2 03 2008

நான் காங்கிரஸ் அரசில் ‘காபினட்’ அமைச்சராகப் பதவி வகிக்க ஒப்புக் கொண்டதால், காங்கிரஸ் கட்சியிலேயே நான் சேர்ந்து விட்டதாகப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘அம்பேத்கரே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்ட பிறகு, பட்டியல் சாதியினர், இன்னும் ஏன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் இருக்கின்றனர்’ என்று சில விமர்சகர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இத்தகைய விமர்சனங்கள் குறித்து நான் லக்னோவில் தெளிவுபடுத்தினேன். பூமியும் பாறையும் இருவேறு பொருட்கள். அவை இரண்டும் ஒன்று சேராது. பாறை, பாறையாகவும்; பூமி, பூமியாகவுமே இருக்கும். நான் பாறையைப் போன்று உறுதியானவன். நான் யாருடன் இருந்தாலும், என்னுடைய தனித்த அடையாளத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்.

Ambedkar எந்தவொரு நற்பணிக்காக, யார் என்னுடைய ஒத்துழைப்பை நல்கினாலும், நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக என்னுடைய ஆற்றலை உண்மையுடன் பங்களிக்க, காங்கிரஸ் அரசுடன் நான்கு ஆண்டுகள் ஒத்துழைத்தேன். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் நான் காங்கிரஸ் கட்சியில் சங்கமமாகிவிட என்னை அனுமதித்தது இல்லை. சிந்தனையிலும் செயலிலும் என்னுடைய மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாத அனைவருடனும் நான் ஒத்துழைத்தேன்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை பட்டியல் சாதியினர் வாழ்வா சாவா என்று எண்ணி செயல்பட வேண்டும். நம்டைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, நம்டைய அத்தனை திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதனுக்குப் பின்னால் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர்கள் கொண்டிருக்கும் வளத்தை வைத்துமே அவன் ஆற்றலைப் பெறுகிறான். நாம் சிறுபான்மையினர், நம்மிடம் பொருள்வளம் இல்லை. நீக்கமற நிறைந்திருக்கும் சாதி இந்து போலிஸ்கள், நாம் முன்வைக்கும் உண்மையான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இதற்கு மாறாக, குற்றம் சுமத்திய ஒரே காரணத்திற்காக நம்மை ஒடுக்குகிறார்கள். வறுமையில் உழலும் நம்மால், அரசு எந்திரத்தை நமக்குச் சாதகமாக செயல்பட வைக்க முடியவில்லை.

இருப்பினும், நம்மிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அதுதான் அரசியல் அதிகாரம். இதை நாம் வென்றெடுக்க வேண்டும். இந்த அதிகாரத்தின் உதவியுடன் நாம் நம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். விடுதலை பெற்ற இந்தியாவில், நம்டைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று எண்ணுகின்றீர்களா? நம்டைய நாடு விடுதலை பெறுவதை நாம் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கான நேரடியான பதிலையே நாம் எதிர்பார்த்தோம். விடுதலை பெற்ற இந்தியாவில் நம்டைய நிலை என்ன? காந்தியிடம் நான் இக்கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

சுயராச்சியத்தில் என் மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் தற்பொழுது இருப்பது போல ‘பாங்கி’களாக, ‘சமார்’களாக நீடித்து இருப்போமா? இப்போது இருப்பது போலவே எங்களுடைய குழந்தைகள், பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுமா? கிராமங்களில் தற்பொழுது எங்கள் மக்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுமா? வட்டமேசை மாநாட்டிலும் நான் காந்தியாரிடம் இதே கேள்வியைத்தான் எழுப்பினேன்.

முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டதைப் போல, எங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமா? ஆனால், பட்டியல் சாதியினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமைகள் 1932 இல் அளிக்கப்பட்டபோது, இந்த உரிமைகளை திரும்பப் பெறும்வரை, காந்தி சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் எங்களிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடக்கிறதோ, அது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்திட்டத்திற்கு நேர் எதிரானது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.

நம்டைய மக்களை தனித்தொகுதி மூலம் அனுப்ப நாம் விரும்பும்போது, அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. சுயநலன்களுக்காக செயல்படும் மூடர்களையும், காங்கிரசுக்கு ‘ஆமாம் சாமி’ போடும் நபர்களையும் காங்கிரஸ் தனித்தொகுதியில் வேட்பாளர்களாக்க முயல்கிறது.

தற்பொழுது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில், 30 பட்டியல் சாதி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த முப்பது பேரும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அங்கு அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை; எந்தத் தீர்மானத்தையும் முன்மொழிவதில்லை; நாடாளுமன்றத்தின் முன்பு எந்தச் சட்டவரைவையும் முன்வைப்பதில்லை. எனவேதான், நாம் நம்டைய உண்மையான பிரதிநிதியை அனுப்ப விரும்புகிறோம். அவர்கள்தான் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நம்டைய கோரிக்கைகளை முன்வைத்து, அதைத் தீர்க்க முயல்வார்கள்.

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு





உங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள்

2 03 2008

நாடாளுமன்ற அவைத் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட உறுப்பினரைக் கேள்வி கேட்க ஒருவேளை பெருந்தன்மையாக அனுமதித்து விட்டாலும், அது அவைக் குறிப்பில் இடம் பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா அந்த உறுப்பினரிடம் பேசி, அக்கேள்வியைத் திரும்பப் பெற வலியுறுத்துவார். அதையும் மீறி ஒருவேளை அந்தக் கேள்வி பதிவாகிவிட்டால், அக்கட்சியின் கொறடா அந்த உறுப்பினரை அன்று மட்டும் ஊரைவிட்டே வெளியேறச் சொல்லி விடுவார். இக்கேள்விக்கான பதில் தேவைப்பட்டாலும், கேள்வி எழுப்பிய உறுப்பினர் இல்லாததால், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறாது. இப்பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

Ambedkar நாடாளுமன்றத்தில் நிதிநிலை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது, எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் நிதிநிலை குறித்துப் பேசலாம். தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும் எத்தகைய சிறப்பு உரிமைகள் வேண்டும் என்று கோரலாம். தேவையற்ற திட்டங்களுக்காக நிதியை வீணடிப்பதற்குப் பதில் முக்கியத் தேவைகளுக்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரே ஒரு உறுப்பினர்கூட வெட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதை நான் பார்த்ததில்லை. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளே காரணம். கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனில், முன்கூட்டியே அவர்கள் கட்சிக் கொறடாவிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரசில் உள்ள தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் எவரும் எந்த சட்டவரைவையும் முன்மொழிந்ததில்லை.

தீண்டத்தகாத மக்கள், இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கான சட்டரீதியான சிறப்புரிமைகளை / அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுடைய எதிரிகள் காங்கிரஸ் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவர்கள் எப்படி அதை அனுபவிக்க முடியும்?

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது நம்முடைய சமூகத்திற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்பியிருந்தால் செய்திருக்கலாம். ஆனால், அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டனர். அந்தக் காலம் கடந்து விட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்திலும் நாம் கவனமாக இல்லாமல், நம் கண்களை மூடிக்கொண்டிருந்தால், நாம் அழிந்து விடுவோம். இனிவரும் தலைமுறையினரும் நம்மைப்போல துன்பப்படக்கூடாது என நினைத்தால், நீங்கள் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் இடஒதுக்கீடு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியாவில் தீண்டாமை நீடித்திருக்கும்வரை, இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என்னை எதிர்த்தனர். எனவே, ஒன்றும் இல்லாமல் இருப்பதற்குப் பதில் ஏதாவது கிடைக்கட்டுமே என்ற வகையில், நான் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு ஒப்புக் கொண்டேன். இந்த இடஒதுக்கீடு இரண்டு தேர்தலுக்கு மட்டும்தான் இருக்கப் போகிறது. அதுவரை மட்டுமே காங்கிரஸ் போன்ற கட்சிகள், உங்களிடம் வாக்குகளுக்காகக் கையேந்தி நிற்கும்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை நீட்டிக்கும்படி உங்களுக்காக யாரும் கேட்கப் போவதில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, நீங்கள் அவர்களின் சார்பில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்குமா? கண்டிப்பாக வைக்காது. அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் உங்களைத்தான் முட்டாள்களாக்குவார்கள். எனவே, நீங்கள் இப்பிரச்சினை குறித்து சிந்தித்து, எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு கட்சிக்கும் பணமோ, அதிகாரமோ இருக்க வேண்டும். நம் சமூகத்திடம் பணமோ, அதிகாரமோ இல்லை. ஆதிக்கச் சாதியினரின் கருணையால் நாம் கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பனியாக்கள் மற்றும் மார்வாரி போன்றவர்களிடம் அதிகாரம் இல்லை; ஆனால், அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தால் எதையும் வாங்க முடியும். எனவே, நீங்கள் உங்களுக்காக எதையாவது செய்து தீர வேண்டிய தருணம் இது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் அனுப்பலாம். இல்லையெனில் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். எனவே, நீங்கள் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின்’ கீழ் ஒன்றிணைந்து, நம் சமூகத்தை குழப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளும் உங்களிடம் வந்து ‘எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்பார்கள். ஆனால், அவர்கள் காட்டும் தவறான பாதைக்கு நீங்கள் சென்றுவிடக் கூடாது.

தொடரும்

28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு





Hello world!

1 03 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!