அம்பேத்கரின் சிறுவயது (சில) அனுபவங்கள்

5 09 2008


“நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார்.அப்போது அம்பேத்க்கர் படித்துக்கொண்டிருந்தார்.”காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்,நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார். அவர்கள் சமுதாயம் விழித்துக்க்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள்தூங்கப்போய்விட்டார்கள்.என்னுடைய சமுதாயம் தூங்கிக்கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.”
இதோ டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை கடலில் இருந்து சில துளிகள்..!

காலையில் மழை சோவெனெ கொட்டத்தொடங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்கு புறப்படும் தருவாயில் இருந்த சிறுவகள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுல் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும் இன்று எப்படியும் பள்ளிக்கு செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக்கேட்ட மற்ற சிறுவர்கள் பீமை கேலி செய்தனர். ‘உன்னால் இந்த அடைமழையில் பள்ளிக்கு செல்ல முடியுமா’ என சவால் விட்டனர். அடுத்த நொடியே எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினான். எப்படியெல்லாம் தனது புத்தகப்பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட படி பள்ளியை நோக்கி விறுவிறு என நடந்து சென்றான்.

ஓரிடத்தில் மழை மிக கடுமையாக கொட்டத்தொடங்க, அருகில் இருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமை பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்து கிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப்பையினுள் இப்போது நீர் முழுவதுமாக புகுந்து இருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னும் அந்த பெண்மணி ஆவேசத்துடன் நின்று கொண்டிருந்தாள். நீயொரு மகார். என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்? என இரைந்தாள். அந்த கொட்டும் மழை ஈரத்தையும் மீறி தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது. தனது குழந்தைகளை எந்த பேய் நெருங்கிவிடக்கூடாது என கிராமத்தில் இருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு விதமான ரூபங்களில் தன் குழந்தைகளை பயமுறுத்தி வருவதை கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்ப கல்வி முடிந்து உயர் நிலை கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளியில் தன் மகனை சேர்க்க சென்ற போது இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத்தொந்ததரவுகளில் இருந்து மகனை பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண்டார். அதன் படி பீம் எனும் அவன் பெயருக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப்பெயரான சக்பாலை எடுத்து விட்டு பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரை சேர்க்க முடிவு செய்து இருந்தார். அந்த பெயர் தான் ‘அம்பேத்கர்’

இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும் போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்த பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான். ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகராஷ்ட்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர் தன் பிள்ளைகளை அவர்களின் அத்தையின் பொறுப்பில் விட்டு விட்டு அங்கே சென்று விட்டார். விடுமுறை நாளின் போது அம்பேத்கர் அவரது சகோதரர் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையை சந்திக்க வேண்டி காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மைசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ இவர்களை அழைத்துப்போக ரயில் நிலையத்துக்கு தந்தை வரவில்லை. மூவரும் வாடகைக்கு ஒரு மாட்டு வண்டியை பிடித்து காரேகான் செல்லத்தயாராகினர். பாதித்தொலைவு சென்று இருப்பார்கள். வண்டிக்காரனுக்கு தான் மகார் இனச்சிறுவர்களை ஏற்றிச்செல்கிறோம் என்பது தெரிய வர சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியை குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கு இடையே மூவரும் தட்டுத்தடுமாறி ஒரு வழியாக காரேகானுக்கு சென்று சேர்ந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்ததாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்க சென்ற போது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடிபாதி வெட்டப்பட்ட நிலையில் அறைகுறையாக இறக்கி விடப்பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து சகோதரிகளால் மீதமுள முடி திருத்தப்பட்ட சம்பவம் என சிறு வயதிலே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்று தான் இவை அனைத்திற்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாக படிப்பில் நாட்டம் செலுத்த தொடங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும் இனிமையான சுபாவத்தாலும் எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்று நோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி அவரை மனதளவில் பள்ளியில் இருந்து விலகி இருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்கு தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால் அந்தக்குறையை புத்தங்கள் போக்கின. ஒரு நல்ல நூலை காட்டிலும் சிறந்த நட்பு வேறு எதுவாக இருந்து விட முடியும்? சமயம் கிட்டும் போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாக செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்க தொடங்குவார். இப்படி சிறு வயதிலே ஆழ்ந்த சிந்தனையும் தனிமையுமாக காணப்பட்ட அந்த சிறுவனை, அந்த பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள் தோறும் கவனிக்க தொடங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அருச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹை ஸ்கூலில் தலமை ஆசிரியரான அவர் அப்போதே அந்த சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். அந்த வருட மெட்ரிக்குலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளியான போது தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஒருவன் முதல் முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்ற மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. ‘நமது சமூகத்தில் முதன் முறையாக ஒருவன் செய்து இருக்கும் சாதனையை நாம் கொண்டாட வேண்டும்” என அந்த மக்கள் முடிவு செய்து அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள்.
அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து எந்த மாணவனை பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்கு தான் நாம் பரிசளிக்க போகிறோம் என்பதை அறிந்த அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.விழாவில் சிறுவன் அம்பேத்கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் கட்டி அணைத்து பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியை கண்டு ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். பின்னாளில் அந்த புத்தகம் தான அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்க போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது.