‘பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-அம்பேத்கர்

மார்ச் 3
நாசிக் நகரமே நடுங்கியது. ஜில்லா மாஜிஸ்திரேட், போலீஸ் சூப்பிரன்டெண்டென்ட் உட்பட எண்ணற்ற அதிகாரிகளும் காவலர்களும் கோயிலின் அடைக்கப்பட்ட கதவுகளின் முன் வந்து குவிந்தனர். இத்தனை களேபரத்துக்கும் காரணம், தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவு ஊர்வலம்!
அம்பேத்கரின் தலைமையில், வரிசைக்கு நான்கு பேராக கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் மிகவும் அமைதியான முறையில் நகரின் மையத்தில் இருந்த காலாராம் கோயிலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர். ஊர்வலம் கோயிலை நெருங்க நெருங்க, நிர்வாகிகளுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் குலைநடுக்கம். எங்கே பெரும் கலவரம் வெடிக்கப்போகிறதோ எனக் கால்கள் வெடவெடக்கக் காத்திருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு!
கோயிலை அடைந்ததும், ஊர்வலத்தினரைக் கோயிலின் நான்கு புறமும் மூடப்பட்டுக்கிடந்த கதவுகளின் முன் அமைதியாக உட்காரும்படி கட்டளையிட்டார் அம்பேத்கர். தலைவனின் கட்டளைக்கு எட்டாயிரம் தலைகளும் கட்டுப்பட்டன. நேரம் கடந்ததே ஒழிய, கதவுகள் திறக்கவே இல்லை. இரவானதும் கூட்டம் களைத்துப்போய் கிளம்பிவிடும், போராட்டம் பிசுபிசுத்துவிடும் என கோயில் நிர்வா கத்தினர் நினைத்தனர்.
ஆனால், இரவு கடந்து மறுநாள் விடிந்த பிறகும் குழுவினர் அப்படியே அமர்ந்திருக்க, கோயில் வாசலும் அடைபட்டுக்கிடந்தது. அடுத்த நாள் காலை, அடுத்த நாள் காலை என ஒவ்வொரு நாளும் நாசிக் நகரத்தின் இந்த வேடிக்கையை ரசித்தபடி, சூரியன் கிழக்கு மேற்காக நகர்ந்துகொண்டு இருந்தான். இன்று எப்படியும் கலவரம் நடக்கும் எனப் பயந்து நடுங்கிய படி ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தவிக்க, போராட்டக் குழுவினர் உறுதியாக அமர்ந்திருந்தனர். தேர்த் திருவிழாவுக்கான நாளும் நெருங்கி வந்தது.
அன்று ஏப்ரல் 8. மறுநாள் ராமர் தேரில் ஊர்வலம் வந்தே ஆக வேண்டும். கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டால்தான், ராமர் வெளியில் வந்து தேரில் அமர முடியும். இக்கட்டான சூழலில் வேறு வழி தெரியாமல், கோயில் நிர்வாகத்தினர் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் எங்களுடன் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து தேரை இழுக்கட்டும் என வழிக்கு வந்தனர்.

அவர்களின் சதித் திட்டம் அறியாத அம்பேத்கர் சம்மதித்தார். ஒரு மாதமாக அடைக்கப்பட்ட கதவுகள் திறந்தன. மறுநாள் தேரை இழுக்கச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அறிவித்த நேரத்துக்கு முன்னதாகவே அவசர அவசரமாக கோயில் நிர்வாகத்தினரும், பிராமணர்களும், இதர சாதி இந்துக்களும் கூட்டு சேர்ந்து, தேரை இழுத்துச் சென்றனர். தகவல் தெரியவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவேசத்துடன் தேரை நோக்கி ஓட, போலீஸார் அவர்களைத் தடுத்து விரட்டி அடித்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள், கடவுளின் பேரால் மீண்டும் ஒருமுறை முதுகில் குத்தப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த கலவரங்களின் முற்றுப்புள்ளியாக, பெருஞ்செல்வந்தரான பிர்லா நேரில் வந்து, அம்பேத்கரைச் சந்தித்து, போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதனால் 1935 வரை நாசிக்கின் புகழ்மிக்க அந்தக் கோயில் மூடியே இருந்தது.
தன் சொந்த நாட்டில், தங்கள் மேல் ஒரு மதம் திணிக்கப்பட்டு, அதேசமயம், அதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு இழிவு படுத்தப்படுவதை இன்னும் எத்தனை நாள்தான் சகித்துக்கொள்வது எனும் வேதனைகொண்டார் அம்பேத்கர். வெறுமனே காங்கி ரஸின் கொள்கைகளான தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், சமபந்தி உணவு என இவற்றால் மட்டுமே தன் சமூகத்துக்கு விடிவுக்காலம் ஏற்படாது. முறையான அரசியல் வாழ்வுரிமையின் மூலமாகத்தான் எதிர்காலச் சந்ததியினருக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனத் தெளிவாக உணர்ந்தார். அதிலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்த உரிமைகளைப் போராடிப் பெற்றால்தான் உண்டு. அவர் களிடமாவது ஒரு பொது நியாயத்தை எதிர்பார்க்கலாம், அவர்கள் போனபின், காலங்காலமாக மதத்தில் ஊறிக்கிடக்கும் உயர் சாதிகள் ஆட்சிக்கு வந்தால், தம் மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது என்ற தெளிவில் இருந்தார். அவரது இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்வது போல் வந்தது… 1930, நவம்பர் 12.
இந்திய வரலாற்றுக்கே திருப்புமுனை நாளாகவும் அமைந்த அந்தப் பொன்னாளில்தான் லண்டனில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக, அரசியலமைப்புச் சட்டங்களில் ஓரளவு சீர்திருத்தத்தை மேற்கொள்வது மாநாட்டை நடத்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் நோக்கம். காந்தியின் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் பேரியக்கம், தீவிரமாக ஒத்துழையாமை இயக்கத்தைக் கடைப்பிடித்துவந்ததால், இந்த மாநாட்டுக்கான அழைப்பைப் புறக்கணித்தனர். காந்தியும் நிராகரித்தார். ஆனால், அம்பேத்கர் தனது மக்க ளுக்கான நியாயமான வாழ்வுரிமைகளை யும் அரசியல் சமத்துவத்தையும் பெற இது சரியான சந்தர்ப்பம் என அழைப்பை ஏற்று லண்டனுக்கு விரைந்தார். அம்பேத்கருடன் சாப்ரூ, ஜெயகர், மூஞ்சே, சென்னையைச் சேர்ந்த ரெட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட பிரமுகர்களும் பல்வேறு சமஸ்தான மன்னர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரின் மேல் மட்டும் கடும் கோபம்கொண்டனர். இந்தியாவுக்கு துரோகம் இழைக்கும்விதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியினருடன் கூட்டு சேர்ந்துவிட்டதாகத் தூற்றினர். சுபாஷ் சந்திரபோஸ§ம் கடுமையாக விமர்சித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அம்பேத்கர் அந்த வலிகளைத் தன் நெஞ்சில் தாங்கியவராக, மாநாடு நடைபெற்ற செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்குள் அடியெடுத்துவைத்தார்.
மதத்தின் பேரால் அடிமைகளாக்கப்பட்டு, அவமான இருட்டில் வாழும் ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்கள் அவர் மனசுக்குள் ஒருசேர ஒரு சொல்லைக் கூவின. அது… ‘விடுதலை’!
நன்றி :விகடன்(அஜயன் பாலா)
-சரித்திரம் தொடரும்