குளத்தில் குளிக்கவோ, குடிக்கவோ, தண்ணீர் மறுக்கப்பட்டு இருந்தது?

6 09 2008

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது!

-அம்பேத்கர்

1927, மார்ச் 19…

பம்பாய், கொலாபா மாவட்டத்தின் மஹத் கிராமத்தில், அன்று எங்கு திரும்பினாலும் முண்டாசுத் தலைகள். மகாராஷ்டிரம் முழுவதுமிருந்து வந்து குவிந்திருந்தனர். உள்ளூர் காவல் தெய்வமான வீரேசுவரர் பேரில் போடப்பட்ட மாநாட்டுப் பந்தலில், குத்துக்காலிட்டு அமர்ந்தபடி, புதிய வரலாற்றை எழுதப்போகும் அந்த நொடிக்காகக் காத்திருந்தனர். அவர்கள் அங்கே கூடியதற்குக் காரணம், சௌதாகர் குளம்!

மகர்களான தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கவோ, குடிக்கவோ, தண்ணீர் மறுக்கப்பட்டு இருந்தது. ஆகாயத்தையோ, காற்றையோ அளக்கத் தெரியாத மூடர்களிடம் தண்ணீர் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டது. அந்தப் பகுதியில் வேறு எங்கும் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

பம்பாய் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்க, மகர்களுக்கு அந்தக் குளத்தில் தண்ணீர் எடுக்க உரிமை உண்டு என உத்தரவு வந்தது. ஆனாலும், பிராமணர்களும் இதர உயர் சாதியினரும் சேர்ந்து மகர்களை அங்கே நீரெடுக்கவிடாமல் அனுமதி மறுத்த தகவல், அம்பேத்கரின் கவனத்துக்கு வந்தது.

கேரளத்தின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் வீதியில் நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டபோது, பெரியார் நேரடியாகச் சென்று போராட்டத்தில் குதித்து வெற்றிவாகை சூடிய கதை அம்பேத்கரின் நினைவுக்கு வந்தது. அதிரடியாகக் களத்தில் இறங்கினார் அம்பேத்கர். மஹத்தில் பிரமாண்டமான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

சுரேந்திர நாத், சுபேதர் சவக்கர், ஆனந்த்ராவ் சித்ரே ஆகியோர், மகாராஷ்டிராவின் கிராமங்களுக்கு நேரில் சென்று மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அதன் விளைவுதான், அன்று வீரேசுவரர் பந்தலில் கூடியிருந்த முண்டாசுகள்.

அம்பேத்கர் மேடையில் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். ”சில ரொட்டித் துண்டுகளுக்காக மனித உரிமையையே விற்பது மானங்கெட்டத்தனம்” வழக்கம் போல, அவரது சுளீர் சாட்டையடிப் பேச்சு, மக்களை உணர்ச்சி அலைகளின் மீது ஓடமாகத் தத்தளிக்கவைத்தது. ”எந்தக் குளத்தில் நமக்கு நீர் மறுக்கப்பட்டதோ, அந்தக் குளத்தை நோக்கி நடப்போம்” என உத்தரவிட்டார்.

அடுத்த நொடி, சௌதாகர் குளம் நோக்கி பெரும் ஜனத்திரள் புதிய சரித்திரத்தைத் தங்களது பாதங்களால் புழுதியில் எழுதியபடி நடந்து வந்தது. குளத்தின் நான்கு புறங்களையும் சுற்றி வளைத்து நின்றனர். எந்தக் குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என மனிதர்கள் ஒதுக்கினார்களோ, அந்தக் குளம் அவர்களின் முகங்களை வாஞ்சையுடன் பிரதிபலித்தது. முதல் ஆளாக அம்பேத்கர் ஒரு கை நீர் அள்ளிப் பருகினார். பின் அனைவரும் இறங்க, குளம் கொண்டாட்டக் களம் ஆகியது.

மீண்டும் அனைவரும் மாநாட்டுப் பந்தலுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தனர். திடீரென எங்கிருந்தோ வந்த உயர் சாதிக் கும்பல், கையில் தடிகளுடன் கூட்டத்தின் ஒரு பகுதியினரைக் கடுமையாகத் தாக்கத் துவங்கியது. ஒட்டுமொத்த கூட்டமும் வீரேசுவரர் கோயிலுக்குள்ளும் இன்னும் இதர கோயில்களுக்குள்ளும் நுழையப் போவதாக யாரோ கிளப்பிவிட்ட வதந்திதான் அவர்களது கோபத்துக்கும் வன்முறைக்கும் காரணம்.

மாநாட்டுப் பந்தலில் இருந்த அம்பேத்கரிடம், அடிபட்டவர்கள் வந்து கதற, அனைவரும் கொதித்து எழுந்தனர். ஆனால், ”வன்முறை ஒருக்காலும் நம் பிரச்னைக்குத் தீர்வாகாது. அது திசை திருப்பிவிடும்” என எல்லோரையும் அஹிம்சை வழியில் நடக்குமாறு அறிவுறுத்தினார் அம்பேத்கர்.

பிரச்னை இதோடு முடியவில்லை. போராட்டத்தால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க உயர் சாதியினர் 108 குடங்களுடன் மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றைக் குளத்தில் கொட்டி தண்ணீரை மீண்டும் ஒரு முறை தங்களது அறிவீனத்தால் களங்கப்படுத்தினர். செய்தி கேள்விப்பட்ட அம்பேத்கரின் மனம் வேதனைக்குஉள்ளானது.

இப்படிச் சிக்கின நூல்கண்டாக அறிவீனத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் மக்களை எப்படி விடுவிப்பது என யோசித்தார். அப்போது அவருக்கு விடையாகத் தெரிந்தது ‘மனு’!

மனு சாஸ்திரத்தால்தான் மனிதர்களை மனிதர்கள் வெறுக்கும் இந்த அவலம் இந்தியாவில் காலங்காலமாகத் தொடர்கிறது. ஆகவே, மனிதர்கள் வெறும் நிழல்கள்தான். மனுதான் நம் மூல எதிரி எனும் முடிவுக்கு வந்தார். விளைவு, 1927 டிசம்பர் 23ம் நாளில் மீண்டும் மஹத்தில் கூடியது மகர்களுக்கான மாநாடு.

தொண்டர்கள் அதே உற்சாகத்துடன் கூடினர். காந்தியின் புகைப்படத்தை மையமாகக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த மாநாட்டு மேடையில், பிராமணர் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் அம்பேத்கர் மனுதர்ம சாஸ்திரத்தைத் தீ வைத்துக் கொளுத்தி, தீண்டா மைக்கு எதிரான யுத்தத்தைத் துவக்கினார்.

மகத்தான இந்த மஹத் போராட்டத்துக்குப் பின் அம்பேத்கரின் புகழ் இந்தியா முழுக்கப் பரவியது. வன்முறை இல்லாமல், அதே சமயம் உறுதிப்பாட்டுடன் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து சனாதனங்களுக்கு முடிவுரை எழுதும் அம்பேத்கரின் அணுகுமுறை இந்தியாவின் இதர தலைவர்களிடத்தும் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தும் பெரும் நன்மதிப்பை உருவாக்கித் தந்தது.

1930, அன்றைய இந்தியாவே காந்தியின் அடுத்த உத்தரவுக்காக, கொந்தளித்துக்கிடந்த நேரம். உப்பு சத்தியாகிரகத்தின் பொருட்டு அவர் தண்டி யாத்திரையைத் துவக்குவதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன் அம்பேத்கர் தனது அடுத்த போராட்டத்துக்காக நாசிக் நகருக்குப் புறப்பட்டார். காரணம், அங்கே இருந்த ராமர் கோயில்.

அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டமாக உத்தரவு பிறப்பித்த பிறகும் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க நிர்வாகத்தினர் மறுத்து வந்தனர். இதற்குத் தீர்ப்பு எழுதும் நேரத்துக்காகக் காத்திருந்த குழுவினருக்கென்றே அந்தக் கோயில் திருவிழாவும் நெருங்கி வந்தது. தேர்த் திருவிழா ஏப்ரல் 9. அதற்கு இன்னும் சரியாக ஒரு மாத கால அவகாசம் இருக்கும் சூழலில், மார்ச் 3ம் தேதி ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் நாசிக்கில் அம்பேத்கர் தலைமையில் கூடினர்.

நான்கு நான்கு பேர்களாக அவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். நாசிக்கில் அந்த ஊர்வலம் அமைதியாக ராணுவ ஒழுங்குடன் கோயிலை நோக்கிப் புறப்பட்டது. தகவல் அறிந்து கோயிலின் நான்கு கதவுகளும் அவசரமாக அடைக்கப்பட்டன!

-சரித்திரம் தொடரும்

நன்றி : விகடன்(அஜயன் பாலா)